
ஜெய்ப்பூர்,
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துல்லிய தாக்குதலில், 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. இதில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா துல்லிய தாக்குதல் நடத்திய நிலையில், பதிலடி என்ற பெயரில் காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் இரு நாட்டு எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், எல்லையை ஒட்டிய பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரு மாநிலங்களிலும், போலீசாரின் விடுமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை காவல்துறையினர் வார விடுமுறை, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.