
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஆனங்கூர் மாரியம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கடந்த திங்கட்கிழமையன்று வடிசோறு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
நேற்று (புதன்கிழமை) காலை சுமார் 9 மணியளவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடம் மற்றும் பால்குடங்களுடன் செல்லாண்டி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காமாட்சி அம்மன், பகவதி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் தீர்த்த குடம் மற்றும் பால்குடங்களுடன் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் குடங்களில் கொண்டு வந்த பால் மற்றும் தீர்த்தங்களால் மாரியம்மனுக்கு அபிஷகம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று மாலை சுமார் 5 மணிக்கு மேல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையல் போட்டு பொங்கல் பூஜையும், அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வந்து கோவில் வளாகத்தில் வரிசையாக வைத்து மாவிளக்கு பூஜையும் செய்தனர். வாண வேடிக்கை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் வளாகம் அருகே 500 பேர் கொண்ட குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இன்று காலை கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றுக்கு சென்று விடுதல் நிகழ்ச்சியும் ,கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.