
கொழும்பு,
இந்தியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 5-வது லீக்கில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவுடன் மீண்டும் மோதியது. உடல்நலக்குறைவால் தென்ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் விலகினார். இதையடுத்து அந்த அணியை வழிநடத்திய பொறுப்பு கேப்டன் குளோ டிரையான் டாஸ் ஜெயித்து முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்தியா 50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது 2-வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 123 ரன்களில் (101 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்கள் எடுத்தார் .
அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. 50 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்க அணியால் 7 விக்கெட்டுக்கு 314 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.
3-வது வெற்றியை பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடர்ந்து 3 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவிய தென்ஆப்பிரிக்கா வெளியேறியது. வருகிற 11-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை சந்திக்கிறது.