போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் காசா மீதான தாக்குதலில் 235 பேர் பலி: இஸ்ரேல் அதிரடி; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

7 hours ago 3

 

ஜெருசலேம்: போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 235 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை முடங்கியுள்ள நிலையில், காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசா மீது நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர். காசாவில் முகாமிட்டிருக்கும் ஹமாஸ் அமைப்புகளின் இடங்களை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியது. காசாவில் மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்தார்.

இஸ்ரேல் ராணுவம் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக ஹமாஸ் குற்றம் சாட்டியது. எங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் இஸ்ரேல் பணயக்கைதிகளின் எதிர்காலத்தை நிச்சயமற்றதாக்கும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் குற்றம் சாட்டுகிறது. இதற்கிடையில், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும், அதுவரை காசா மீது வான்வழி தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களில் 235 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் காசாவிற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஏமன் மீதான அமெரிக்க ராணுவ தாக்குதல்களால் 20க்கும் மேற்பட்ட ஹவுதி போராளிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வேலைகளில் ஈரான் ஈடுபட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இதற்கிடையே ஹவுதிகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் ஏமனின் சனாவில் பேரணி நடத்தினர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் இதுவரை 48,672 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், இஸ்ரேல் தரப்பில் 1,139 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

The post போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் காசா மீதான தாக்குதலில் 235 பேர் பலி: இஸ்ரேல் அதிரடி; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article