
ஸ்ரீநகர்,
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தது.
அதேவேளை, இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று மாலை 5 மணியளவில் அறிவித்தார். இதையடுத்து, பாகிஸ்தானுடனான போர் இன்று மாலை 5 மணி முதல் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் டிரோன், ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் நிறுத்தம் அமலாகவில்லை என்று ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், போர் நிறுத்தம் அமலாகவில்லை. பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது' என தெரிவித்துள்ளார்.