
மும்பை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், நவாசுதீன் சித்திக். வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் இவர், பல விருதுகளையும் தன் வசப்படுத்தி இருக்கிறார். இவர் நடித்த கேங்க்ஸ் ஆப் வாஸ்ஸேபூர், தி லஞ்ச்பாக்ஸ், ராமன் ராகவ் 2.0, மற்றும் மாண்டோ போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தன. சமீபத்தில் அவரிடம், திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளில் நடிகர்கள் நடனம் ஆடுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-
"திருமணங்கள் அல்லது தனியார் நிகழ்வுகளில், அதிக பணத்திற்காக நடிகர்கள் நடனமாடுவதில் எந்தத் தவறும் இல்லை. உண்மையில், வாய்ப்பு கிடைத்தால் நானும் அதைச் செய்வேன். அது எங்கள் தொழிலின் ஒரு பகுதி. ஏனெனில் நடிகர்களாகிய நாங்கள் அனைவருமே, பொழுதுபோக்கு கலைஞர்கள்தானே. கடந்த காலத்தில், அதுபோன்ற கலைஞர்களுக்கு, சமூகத்தில் எந்த மதிப்பும் இருந்ததில்லை. பல இடங்களில் அவர்களை பங்கேற்க அனுமதிக்க மாட்டார்கள். அந்த கலைஞர்கள் அனைவரும் அதற்கு தகுதியற்றவர்களாக பார்க்கப்பட்டனர். அவர்கள் கிராமங்களுக்கு வெளியே கூடாரங்களில் வைக்கப்பட்டனர். அவர்கள் நிகழ்ச்சி நடத்த மட்டுமே ஊருக்குள் அனுமதிக்கப்படுவார்கள், பின்னர் உடனடியாக வெளியே அனுப்பப்படுவார்கள். சினிமாவில் இருக்கும் நடிகர்களும், அது போன்ற கலைஞர்கள்தான், அவர்கள் மட்டும் பொதுவெளியில், தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பணத்திற்காக நடனம் ஆடினால் என்ன தவறு இருக்கிறது" என்று காட்டமாக கேட்டிருக்கிறார்.