
கீவ்,
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 172வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனிடையே, கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை உக்ரைன் மீதான போரை 3 நாட்களுக்கு ரஷியா தற்காலிகமாக நிறுத்தியது.
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் 80ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உக்ரைன் போர் 3 நாட்கள் நிறுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் முக்கிய போராக 'பெரும் தேசபக்தி போர்' பார்க்கப்படுகிறது. ஜெர்மனியை எதிர்த்து சோவியத் யூனியன் (ரஷியா) போரிட்டதே 'பெரும் தேசபக்தி போர்' என அழைக்கப்படுகிறது. அந்த போர் நிறைவடைந்த 80ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உக்ரைன் போரை 3 நாட்கள் நிறுத்தி ரஷிய அதிபர் புதின் அறிவித்தார். இதன் காரணமாக கடந்த 3 நாட்கள் எந்த தாக்குதலையும் ரஷியா நடத்தவில்லை.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ரஷியா சென்றுள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, போலந்து போன்ற நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் சென்றுள்ளனர். அவர்கள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தனர். அதன்பின் பேசிய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு நிறுத்துமாறு ரஷியாவிடம் கோரிக்கை விடுத்தனர். 30 நாட்கள் போர் நிறுத்தம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.