போர் தொடங்கி 3 ஆண்டு முடிந்தும் பாடம் கற்கவில்லை: டிரம்ப், புடினுக்கு சவால் விடும் ஜெலென்ஸ்கி.! ‘நேட்டோ’ கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதால் சிக்கல்

4 hours ago 2

புதுடெல்லி: உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 3 ஆண்டு முடிந்தும் உக்ரைன் அதிபர் பாடம் கற்கவில்லை என்றும், அவர் டிரம்ப், புடினுக்கு சவால் விடும் ‘நேட்டோ’ கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடைபெற்று வரும் மிகப்பெரிய ரத்தக்களரி மோதலாக ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் நீடிக்கிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் நேற்றுடன் போர் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், உக்ரைனை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, போருக்கான அடுக்கடுக்கான காரணங்களை கூறி வருகிறது. இவை அனைத்திற்கும் மத்தியில், சமீபத்தில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார். அதேநேரம், உக்ரைனுக்கு தங்கள் ஆதரவைக் காட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எந்த விலை கொடுத்தாலும் உக்ரைனை தனியாக விடமாட்டோம் என்று ஐரோப்பிய நாடுகள் தெளிவுபடுத்தியுள்ளன. மறுபுறம், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து சாத்தியமான வழிகளையும் ஆராய்ந்து வருகிறார். உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் அந்தஸ்து கிடைத்தால், தனது பதவியை ராஜினாமா செய்து விடுவதாகவும் கூட ஜெலென்ஸ்கி அறிவித்துவிட்டார். போர் நிறுத்தத்திற்கான பேச்சுகள் ஒருபக்கம் பேசப்பட்டாலும், கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் மீது ரஷ்யா படைகள் 267 ட்ரோன் தாக்குதல்களை நடத்தின. ஈரானிடமிருந்து வாங்கப்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் நகரங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மூன்று ஆண்டாக நடைபெற்று வரும் போரால், உக்ரைனின் உள்கட்டமைப்பில் 120 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் 18 சதவீத பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துக் கொண்டது. போரில் பலியானவர்களின் எண்ணிக்கை விபரங்களை முழுமையாக இரு நாடுகளாலும் வழங்கவில்லை.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அளித்த பேட்டியில், ‘இதுவரை 46,000க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் போரில் கொல்லப்பட்டனர். 3,80,000 வீரர்கள் காயமடைந்துள்ளனர்’ என்று கூறினார். மறுபுறம் ரஷ்யா தரப்பில் கடந்த 2022 செப்டம்பர் வரை ஆறாயிரம் வீரர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. மூன்றாண்டு போரில் ரஷ்யா தரப்பில் குறைந்தது 91,000 வீரர்கள் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடந்த டிசம்பரில் அளித்த பேட்டியில், இதுவரை 1,98,000 ரஷ்ய வீரர்கள் போரில் கொல்லப்பட்டதாகக் கூறினார். அதற்கு மேல், ரஷ்யாவிற்கு ஆதரவாக போர் களத்தில் இருந்த 1,100 வடகொரிய வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். போரில் இரு நாட்டின் வீரர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள்.

ஸ்வீடனின் உப்சாலா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழுவான உப்சாலா மோதல் தரவுத் திட்டத்தின்படி, போரில் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,74,000 முதல் 4,20,000 வரை இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் கூற்றுப்படி, உக்ரைனில் பொதுமக்கள் 12,500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; சுமார் 28,400 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. உக்ரைன் அதிகாரிகள் கூற்றுபடி 20,000 முதல் 80,000 உக்ரைன் மக்கள் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் ரஷ்யா தரப்பில், சில நூறு பேர் மட்டுமே இறந்ததாக கூறப்படுகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் தரப்பில் சுமார் 50,000 பேர் மாயமானதாக கூறப்பட்டுள்ளது.

சுமார் ஒரு கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். கடந்த 3 ஆண்டு போரில், உக்ரைனுக்கு அதிகளவு இழப்பு ஏற்பட்டிருந்தாலும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நேட்டோவில் இணைவதாக சொல்லப்பட்டதுதான் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க முக்கிய காரணம். அப்படியிருக்க மீண்டும் நேட்டோ கோரிக்கையை ஜெலென்ஸ்கி முன்வைப்பது, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடினுக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே உக்ரைன் – ரஷ்யா இடையிலான இவ்விவகாரம் மேலும் சூடுபிடிக்கலாம் என்றே கூறப்படுகிறது.

The post போர் தொடங்கி 3 ஆண்டு முடிந்தும் பாடம் கற்கவில்லை: டிரம்ப், புடினுக்கு சவால் விடும் ஜெலென்ஸ்கி.! ‘நேட்டோ’ கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதால் சிக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article