தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மின் கம்பிகளை சூழ்ந்துள்ள மரக்கிளைகள்: காற்றில் உரசி தீப்பொறி: பொதுமக்கள் அச்சம்

2 hours ago 1

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு தாம்பரம், கிழக்கு தாம்பரம், கடப்பேரி, சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், அஸ்தினாபுரம், சிட்லபாக்கம், செம்பாக்கம், மாடம்பாக்கம், சேலையூர், இரும்புலியூர், பீர்க்கன்காரணை, புது பெருங்களத்தூர், பழைய பெருங்களத்தூர், சி.டி.ஓ காலனி, கன்னடபாளையம், திருநீர்மலை, பம்மல், அனகாபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான குடியிருப்புகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கண்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையிலும், எந்த நேரத்திலும் உடைந்து விழுவது போல் சாய்ந்த நிலையிலும், மின்கம்பிகள் முழுவதும் மரக்கிளைகள், செடி கொடிகள் சூழ்ந்தபடியும் காணப்படுகிறது.

இதனால் லேசாக காற்று வீசினாலும் மரக்கிளைகள், மின் கம்பிகள் மீது உரசி பயங்கர சத்தத்துடன் தீப்பொறி ஏற்படுவதுடன் மின் இணைப்பும் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. தற்போது வெயில் காலம் தொடங்கி உள்ளதால் மின் கம்பிகள் உரசும்போது தீப்பொறி ஏற்பட்டு அதில் காய்ந்திருக்கும் இலைகள் தீப்பற்றி எரிந்து பெரும் தீ விபத்து ஏற்படும் நிலை உள்ளது. அதுமட்டுமின்றி காற்று வீசும்போது மரக்கிளைகள் மின்கம்பியில் உரசும் போது, மின் கம்பிகள் கீழே அருந்து விழும் நிலை உள்ளது.

இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலையில் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.எனவே மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை சூழ்ந்துள்ள மரக்கிளைகள் மற்றும் செடிகொடிகளை அவ்வப்போது வெட்டி அப்புறப்படுத்தி முறையாக பராமரிப்பதோடு மின் துண்டிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை முறையாக பராமரிப்பது இல்லை.

இதனால் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளில் மரக்கிளைகள், செடி கொடிகள் சூழ்ந்த சிறிய காற்று அடித்தாலே ஒன்றுடன் ஒன்று உரசி அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப் படுவதுடன் தொடர்ந்து பல மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது.தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் காற்று அடிக்கும் போது மரக்கிளைகள், செடி கொடிகள் மின்கம்பிகளில் உரசி தீப்பொறி ஏற்படுவதுடன் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. அவ்வப்போது சில இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழும் அபாயம் உள்ளது.

குறிப்பாக தாம்பரம் – தர்காஸ் பிரதான சாலையில், தாம்பரம் ஆர்டிஓ அலுவலகம் அருகே, பழைய ஸ்டேட் பாங்க் காலனி, அம்பாள் நகர், முல்லை நகர், தாம்பரம் – திருநீர்மலை பிரதான சாலை, கோவிந்தராஜன் தெரு, சி.டி.ஓ காலனி, ரங்கநாதபுரம், கஸ்தூரிபாய் நகர் போன்ற பல்வேறு பகுதிகளில் மின்கம்பிகளை மரக்கிளைகள் சூழ்ந்துள்ளது. மின்வாரிய அதிகாரிகள் இதனை கண்டுகொள்வதே இல்லை. தற்போது வெயில் தாக்கம் காரணமாக, வீட்டிலேயே ஓய்வெடுக்கும் போது மதிய நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் வீட்டில் குழந்தைகள், முதியோர்கள், பொதுமக்கள் என அனைவரும் அவதிக்குள்ளாகின்றனர்.

பெரும்பாலான பகுதிகளில் உயர் மின்னழுத்தம் ஏற்படுவதால் வீடுகளில் உள்ள விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்கள் அனைத்தும் பழுதாகிறது.இதுபோன்ற உயர் மின்னழுத்தம் அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிகம் ஏற்படுகின்றது. அவ்வப்போது பராமரிப்பு பணி என காலை முதல் மாலை வரை மின்தடை அறிவிக்கப்படும் நிலையில், மின்வாரிய ஊழியர்கள் இதுபோன்ற எந்த பராமரிப்பு பணியையும் செய்வதில்லை. மின் பிரச்னைகள் குறித்து மின்வாரிய அலுவலகங்களுக்கு தொடர்புகொண்டால் பெரும்பாலான நேரங்களில் அவர்கள் அழைப்பை எடுப்பதே இல்லை. சில சமயங்களில் அழைப்பை எடுத்தாலும் அலட்சியமாக பதில் சொல்லி இணைப்பை உடனடியாக துண்டித்து விடுகின்றனர்.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டு தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் எங்கெங்கெல்லாம் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளில் மரக்கிளைகள், செடி கொடிகள் சூழ்ந்து இருக்கின்றதோ அவற்றை முழுமையாக அகற்ற வேண்டும். எங்கெல்லாம் மின்கம்பங்கள் சேதமடைந்து இருக்கின்றதோ அவற்றை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பங்களாக மாற்ற வேண்டும். உயர் மின்னழுத்தம் ஏற்படுகின்ற பகுதிகளை கண்டறிந்து அவற்றை சரி செய்ய வேண்டும்,’’ என்றனர்.

The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மின் கம்பிகளை சூழ்ந்துள்ள மரக்கிளைகள்: காற்றில் உரசி தீப்பொறி: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article