
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்றுவந்த போர் நேற்று மாலை 5.00 மணியுடன் நிறுத்தப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இரண்டு நாடுகளும் பேசித் தீர்வு காண வேண்டும். பகாஷ்மீரிலுள்ள பஹல்காமில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடித்தது. அது மேலும் விரிவடையக்கூடாது; போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என இரண்டு நாடுகளைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் வலியுறுத்தி வந்தன.
உலக அளவில் ஈரான், சீனா, ஜி7 நாடுகள் போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டன. அதற்கெல்லாம் உடன்படாமல் இரண்டு நாடுகளும் போரைத் தீவிரப்படுத்தின. ராணுவ மையங்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக இரண்டு நாடுகளும் சொன்னபோதிலும் இரண்டு தரப்பிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட பொது மக்களே அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.
போரை நிறுத்துவதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களோடும், பாகிஸ்தான் ராணுவத் தளபதியிடமும் பேசினார். அமெரிக்கா மேற்கொண்ட சமரசத்தின் விளைவாகவே இந்தப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் சமரசமோ அல்லது இரு நாடுகளின் சுயமான முடிவோ எப்படியாயினும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
போரினால் உறவினர்களை இழந்தோர் மற்றும் உடைமைகளை இழந்தோருக்கு காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளோடு இணைந்து உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். குண்டுவீச்சில் சிதைந்த கட்டுமானங்களைச் சரி செய்வதற்கு மாநில அரசுகளுக்கு உரிய நிதி வழங்கப்பட வேண்டும். அத்துடன், கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
போர் என்பது ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும். அதனால் பொதுமக்கள் ஒருபோதும் பயனடைவதில்லை. எனவே, மீண்டும் போர் வெடித்துவிடாமல் பார்த்துக்கொள்வதோடு, பயங்கரவாதத்தை முற்றாக அழித்தொழிப்பதற்கு உலக அளவில் வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றித் தீர்வுகாண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.