![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35685683-vegai.gif)
வேங்கைவயல்,
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இவ்வழக்கு 2023ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரி சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று திடீர் திருப்பமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பிருப்பதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்தது. இதன்படி வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன், முரளிராஜா ஆகிய மூன்று பேருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறியது.
முரளி ராஜா பொய் தகவலை பரப்பியதாகவும், சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மேல்நிலைத் தொட்டி மீது ஏறி மனிதக் கழிவை தண்ணீரில் கலந்ததாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக, தமிழக அரசு தெரிவித்தது. சம்பவம் நடந்து சுமார் 2 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கையே நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு, குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டது தொடர்பாக புகார் அளித்தவர்கள் மீதே குற்றம் சாட்டியுள்ளனர். இவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல. உண்மையில் குடிநீர் தொட்டி ஆபரேட்டரான மாற்று சமூகத்தைச் சேர்ந்த சண்முகத்தை பணி நீக்கம் செய்ததற்கு வேங்கைவயல் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பஞ்சாயத்து தலைவரின் கணவரின் தூண்டுதலின்பேரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறையாக இந்த வழக்கை புலன் விசாரணை செய்யவில்லை, ஒருநபர் ஆணையமும் இதுவரையிலும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்தி கீழ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. குற்றப்பத்திரிகையில் அதிருப்தி இருந்தால் கீழ் கோர்ட்டை அணுகலாம். அரசு தரப்பின் அறிக்கைக்கு வருகிற மார்ச் 10-ந்தேதிக்குள் மனுதாரர் பதில் அளிக்க வேண்டும். விசாரணையை மார்ச் 27-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்'' என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி தொடர் போராட்டம் நடத்த விடுதலை சிறுத்திகள் கட்சி அறிவித்துள்ளதால் வேங்கைவயல், சுற்றுவட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேங்கைவயல் கிராமத்திற்குள் நுழையும் பகுதியான வெள்ளனூரில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கிராமத்தை சுற்றி 10 சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிராக, வேங்கைவயல் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.