திருவனந்தபுரம்: கொச்சியில் போலீசார் போதைப்பொருள் சோதனை நடத்தும்போது ஓட்டலில் இருந்து தப்பி ஓடிய பிரபல மலையாள நடிகர் ஷைன் டோம் சாக்கோ பொள்ளாச்சியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரை கேரள போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் போதைப்பொருள் கும்பல் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அப்போது அந்த ஓட்டலில் 3வது மாடியில் ஒரு அறையில் தங்கியிருந்த பிரபல மலையாள நடிகரான ஷைன் டோம் சாக்கோ அங்கிருந்து குதித்து தப்பி ஓடினார்.
இவர் தப்பி ஓடிய சிசிடிவி காட்சிகள் ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் ஷைன் டோம் சாக்கோ கடந்த சில வருடங்களுக்கு முன் கொக்கைன் என்ற போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவர் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாக புகார் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் போலீசார் சோதனையின்போது ஓட்டலில் இருந்து தப்பி ஓடியதால் அவரிடம் போதைப்பொருள் இருந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இதனால் ஷைன் டோம் சாக்கோவை பிடித்து விசாரிக்க போலீசார் தீர்மானித்தனர். ஆனால் இதுவரை போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அவர் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இவர் பொள்ளாச்சியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசியமாக தங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து கொச்சி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே படப்பிடிப்பின்போது போதைப்பொருள் பயன்படுத்தி தன்னிடம் நடிகர் ஷைன் டோம் சாக்கோ அத்துமீறியதாக பிரபல மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் கூறியது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மலையாள நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், கேரள பிலிம் சேம்பர் மற்றும் அவர் நடித்த படத்தின் புகார் கமிட்டியிடம் இது தொடர்பாக நடிகை வின்சி அலோஷியஸ் புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரிக்க மலையாள நடிகர்கள் சங்கம் சார்பில் மூன்று பேர் அடங்கிய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டி விசாரணை நடத்தி நடிகர்கள் சங்கத்திடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இந்த அறிக்கையின்படி நடிகர் ஷைன் டோம் சாக்கோ மீது நடிகர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
The post போதைப்பொருள் சோதனையின்போது தப்பி ஓடிய மலையாள நடிகர் பொள்ளாச்சியில் பதுங்கல்..? கேரள போலீஸ் தீவிர வேட்டை appeared first on Dinakaran.