சென்னை: போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளி மற்றம் கல்லூரிகளில் 15,266 போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டு, 1,99,136 மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சிறப்பாக செயல்படும் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றத்தினை தேர்வு செய்து பரிசுகள் வழங்கிட மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்களை தேர்வு செய்யும். கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போதைப் பொருள் நடமாட்டம் குறித்த புகார்கள் அளிக்க ஏதுவாக புதிதாக “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற அலைபேசி செயலியை நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தொடங்கி வைத்தார்.
இச்செயலி மூலம் புகார் அளிப்பவர்களின் பெயர்கள் மற்றும் தரவுகள் ரகசியம் காக்கப்படும். மேலும் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு இயக்கத்திற்கான இலட்சினையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தீரஜ் குமார், உயர்கல்வித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (அமலாக்கப் பணியகம் குற்றப் புலனாய்வுத் துறை) அமல் ராஜ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் கார்த்திகா, போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு இயக்க மேலாண்மை அலகு இயக்குநர் ஆனி மேரி சுவர்ணா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு-செயலி: தலைமை செயலாளர் முருகானந்தம் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.