ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் சாலையில், கடந்த வாரம் ராஜஸ்தான் துணை முதல்-மந்திரி பிரேம் சந்த் பைரவாவின் மகன், கார் ஒன்றை ஓட்டிச் செல்வது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. அந்த காரில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புஷ்பேந்திர பரத்வாஜ் என்பவரது மகனும், மேலும் 2 நபர்களும் உடனிருந்தார். அந்த காரை ராஜஸ்தான் அரசு வாகனம் ஒன்று பின்தொடர்ந்து வருவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி துணை முதல்-மந்திரி பிரேம் சந்த் பைரவாவின் மகனுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அதன்படி, வாகனத்தில் அனுமதியின்றி மாற்றம் செய்ததற்காக ரூ.5,000, சீட் பெல்ட் அணியாததற்காக ரூ.1,000 மற்றும் வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தியதற்காக ரூ.1,000 என மொத்தம் ரூ.7,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் இருந்த கார் காங்கிரஸ் நிர்வாகி புஷ்பேந்திர பரத்வாஜின் மகனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 7 நாட்களுக்குள் உரிய விளக்கமளிக்குமாறு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், காரின் உரிமையாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து துணை முதல்-மந்திரி பிரேம் சந்த் பைரவா கூறுகையில், "என்னிடம் சொந்தமாக வாகனம் இல்லை. எனது வீட்டில் இருக்கும் ஜீப், என்னுடைய மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னைப் போன்ற நபரை ராஜஸ்தானின் துணை முதல்-மந்திரி ஆக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நான் நன்றி கூறுகிறேன்.
எனது மகன் வாகனம் ஓட்டுவதற்கான சட்டப்பூர்வ வயதை இன்னும் எட்டவில்லை. நான் துணை முதல்-மந்திரி ஆன பிறகுதான் எனது மகனுக்கு வசதி படைத்த மக்களுடன் பழகவும், அவர்களுடன் சொகுசு கார்களில் அமர்ந்து பயணிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வீடியோவில், எனது மகன் பயணித்த காரை போலீஸ் வாகனம் ஒன்று பாதுகாப்புக்காக பின்தொடர்ந்து செல்வதை பார்க்கலாம். சிலர் இதை தவறாக புரிந்து கொள்ளலாம். ஆனால் நான் என் மகனையோ, அவனது நண்பர்களையோ குறை சொல்ல மாட்டேன்.
அதே சமயம், இந்த விவகாரத்தால் கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. எனது மகன் ஒரு குழந்தை. இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அவனுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.