
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று மாலை அரங்கேறிய 67-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரெவிஸ் 57 ரன்களும், கான்வே 52 ரன்களும் அடித்தனர். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 18.3 ஓவர்களில் 147 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 41 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் அன்ஜூல் கம்போஜ், நூர் அகமது தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து சுப்மன் கில் அளித்த பேட்டியில், "பவர்பிளேயில் ஆட்டம் எங்களிடமிருந்து கிட்டத்தட்ட விலகிச் சென்றுவிட்டது என்று நினைக்கிறேன். 230 ரன்கள் போன்ற பெரிய இலக்கினை துரத்தும்போது நிச்சயம் அழுத்தம் அதிகளவில் இருக்கும். ஏற்கனவே சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பிலிருந்து வெளியேறி விட்டதால் அவர்களது பேட்ஸ்மேன்கள் எந்தவொரு அழுத்தமும் இன்றி சுதந்திரமாக விளையாடினர்.
ஆனால் நாங்கள் அழுத்தத்தின் கீழ் சிக்கிக்கொண்டோம். அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிந்தோம் என்று நினைக்கிறேன். மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். நீங்கள் அதைச் செய்யவில்லை என்றால் அது சவாலானதாக மாறும். கடந்த இரண்டு ஆட்டங்களில் நாங்கள் அங்குதான் தவறிவிட்டோம். இந்த முடிவு கடினமானதாக இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு இன்னும் 2 அல்லது 3 ஆட்டங்கள் (பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி) உள்ளன" என்று கூறினார்.