
சென்னை,
தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக அரசால் 1975-ம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. வங்கிசாரா நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி சென்னை, திருவல்லிக்கேணியில் செயல்படுகிறது.
இங்கு 1.37 லட்சம் வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.10 ஆயிரத்து 427 கோடியை முதலீடு செய்துள்ளனர். ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து முதலீடு பெறப்படுகிறது.
அதில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனம் 50-ம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறப்பு வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பணம் பெருக்கும் எனும் திட்டத்தின் கீழ் சாதாரண குடிமக்களுக்கு ஓராண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு 8.10 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை அடிப்படை வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரம் முதலீடு செய்யும்பட்சத்தில் ஓராண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.54,175 முதல் ரூ.76,140 வரை வழங்கப்படும். அதேநேரம், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓராண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு 8.25 சதவீதம் முதல் 9 சதவீதம் அடிப்படை வட்டி விகிதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.54,254 முதல் ரூ.78,025 வரை வழங்கப்படுகிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு www.tdfc.in என்ற இணையதளம் அல்லது 044-25333930 என்ற எண்ணை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.