போக்குவரத்து நெரிசல்

2 weeks ago 5

நாட்டில் எந்த முன்னணி நகரங்களை எடுத்துக்கொண்டாலும் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதற்கு மக்கள் தொகை பெருக்கம் ஒரு பக்கம், வாகனங்கள் அதிகரிப்பு மறுபுறம் என்று கூறலாம். பொது போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்தாமல் தனி நபர் காரில் பயணிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் எந்த நகரத்தையும் விட்டுவைக்கவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண மெட்ரோ ரயில் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது கடினமாகவே இருக்கிறது. சென்னை மக்களுக்கு புறநகர் மின்சார ரயில் மிகப்பெரிய வரம். சிரமமின்றி தங்கள் பயணத்தை மக்கள் மேற்கொள்கிறார்கள். ஆனால் மின்சார ரயில் அனைத்து தடத்திலும் 25 நிமிடத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் தற்போது இயக்கப்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரவிலும் ரயில்களை குறைத்துவிட்டதால் வேலை முடிந்து வீடு திரும்புவோர் அவதிக்கு ஆளாகின்றனர். இதனால் சொந்த வாகனங்களில் அலுவலகம் செல்ல விரும்புகின்றனர்.

பெங்களூருவில் 10 கிமீ தூரத்தை கடக்க சராசரியாக 34 நிமிடம் 10 விநாடிகள் ஆவதாகவும், இதன்மூலம் உலகின் 3வது மிக மெதுவான டிராபிக் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 3ம் இடத்தை பிடித்திருப்பதாகவும், டாம் டாம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. பெங்களூருவில் சுமார் ஒரு கோடிக்கு மேல் வாகனங்கள் இயங்குகின்றன. பெங்களூரு போக்குவரத்து நெரிசல் உலகளவில் மிகப்பிரபலம். டாம் டாம் என்ற டச்சு ஜியோலொகேஷன் டெக்னாலஜி நிறுவனம் 62 நாடுகளில் 500 மாநகரங்களில் நடத்திய ஆய்வின் அடிப்படையில், பெங்களூரு மாநகரம் மெதுவான போக்குவரத்து பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளது. அதே போல் கொல்கத்தா நகரம் 2ம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் புனே நகரம் 4ம் இடத்திலும், லண்டன் 5ம் இடத்திலும் உள்ளன.

2023ம் ஆண்டு டாம் டாம் ஆய்வறிக்கையில் 6ம் இடத்தில் இருந்த பெங்களூரு, 2024ம் ஆண்டில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. பெங்களூருவில் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அலுவலகத்துக்கு குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத விரக்தியில் பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளதும் அரங்கேறியுள்ளது. முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒருவழிப்பாதை, மாற்றுப்பாதை என்று பல நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டாலும் பயன் அளிக்கவில்லை. வாகனங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டே இருந்தாலும் பரவாயில்லை. ஒரு இடத்தில் அப்படியே 15 நிமிடத்துக்கு மேல் நின்றுவிடுவது தான் பிரச்னை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெங்களூருவில் அனைத்து ஐடி நிறுவனங்களும் இயங்குகின்றன. இவர்கள் இரண்டாம் டயர் சிட்டிக்கு தங்கள் நிறுவனத்தை மாற்ற விரும்பாததால் மாநகர எல்லையை எவ்வளவு விரிவுபடுத்தினாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, சாலை விரிவாக்கப்பணிகள், அனைத்து பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் இணைப்பு ஆகிய திட்டங்களால் வரும் காலத்தில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த திட்டங்கள் நிறைவடைவதற்குள் வாகனங்களின் எண்ணிக்கை நகரத்தில் மேலும் அதிகரித்துவிடும். அப்போதும் இதே நிலை தான் நீடிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

The post போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Read Entire Article