திருவனந்தபுரம்: அங்கன்வாடியில் பயிலும் சிறுவன், உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும் பொரிச்ச கோழியும் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளான். அதை பரிசீலனை செய்வதாக கேரள அமைச்சரும் கூறியுள்ளார். கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கு என்ற 3 வயது சிறுவன் பேசும் ஒரு வீடியோ வைரலாக பரவியது. சிறுவன் வீட்டுக்கு அருகில் உள்ள அங்கன்வாடிக்கு சென்று வருகிறான். அங்கு தினமும் கொடுக்கும் உப்புமாவை சாப்பிட்டு அவனுக்கு போர் அடித்து விட்டது. எனவே அங்கன்வாடியில் பிரியாணியும், பொரிச்ச கோழியும் சாப்பிட தர வேண்டும் என்று தனது அம்மாவிடம் சிறுவன் கூறியுள்ளான்.
அதை சிறுவனின் தாய் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். வைரலாக பரவிய இந்த வீடியோ கேரள சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜின் கவனத்திற்கு சென்றது. இது குறித்து அவர் கூறியது: சிறுவன் கள்ளம் கபடமில்லாமல் கூறியதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். தற்போது அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு பால், முட்டை போன்ற சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சங்குவின் கோரிக்கையை ஏற்று அங்கன்வாடி மெனுவில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post அங்கன்வாடியில் உப்புமா வேண்டாம்; பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேணும்; சிறுவனின் வீடியோ வைரல்: அமைச்சர் பரிசீலனை appeared first on Dinakaran.