புதுடெல்லி: டெல்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் ேநற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் நாளை (பிப். 5) நடைபெறுவதால், நேற்றுடன் வேட்பாளர்களின் ேதர்தல் பிரசாரம் ஓய்ந்தது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன. ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி, சட்டப் பேரவைத் தேர்தலை தனித்து நின்று களம் காண்கிறது.
அந்தக் கட்சிக்கு கூட்டணியில் சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரித்தனர். ஆனால் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்பி பிரியங்கா காந்தி, கர்நாடக துணைமுதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் வாக்கு சேகரித்தனர்.
‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசும், ஆம்ஆத்மியும் தனித்தனியாக போட்டியிடுவதால் ஒருவரை சாடி பிரசாரம் செய்தனர். அதேநேரம் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கூட்டணி கட்சி முதல்வர்கள் உள்ளிட்டோர் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தினர். டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் 699 வேட்பாளா்கள் போட்டியிட்டுள்ளனர்.
இந்நிலையில், நாளை காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்துவது, செய்திகள் வெளியிடுவது, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்வது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் – 1951, பிரிவு 126 (ஏ) 1-ல்வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி 5ம் தேதி புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது.
பத்திரிகை, தொலைக்காட்சி என எந்த ஊடகத்திலும் கருத்துக் கணிப்பு வெளியிட கூடாது’ என்று தெரிவித்துள்ளது. ெடல்லியில் மொத்தமுள்ள 13,033 வாக்குச்சாவடிகளில் அடையாளம் காணப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளிலும், எல்லையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் ஒரு தொகுதியிலும், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் நடைபெறும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் ஆம்ஆத்மியும், ஆட்சியை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்ற வேட்கையுடன் பாஜகவும், காங்கிரசும் களம் காண்பதால் டெல்லி தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
The post 70 எம்எல்ஏக்கள் பதவிக்கு 699 பேர் போட்டி; டெல்லியில் நாளை வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.