பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட 2 பெண்கள் இழப்பீட்டு தொகைக்கு விண்ணப்பம்

4 hours ago 1

கோவை,

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 குற்றவாளிகளுக்கு, கோவை மகளிர் கோர்ட்டு கடந்த 13-ந்தேதி சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு உள்பட 9 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தம் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இழப்பீட்டு தொகையை பெற, கோவை சட்ட உதவி மையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். இது குறித்து இந்த வழக்கில் ஆஜரான சி.பி.ஐ. வக்கீல் சுரேந்திர மோகன் கூறியதாவது:-

இந்த வழக்கில் மொத்தம் 8 பெண்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 7 பெண்களுக்கு ரூ.85 லட்சத்தை பிரித்து வழங்க மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டது. இதுவரை 2 பெண்கள் இழப்பீட்டு தொகைக்கு விண்ணப்பித்து உள்ளனர். மேலும் பலர் விரைவில் விண்ணப்பிப் பார்கள். அவர்களுக்கு சட்ட உதவி மையம் மூலம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் தலா ரூ.25 லட்சத்தை நிவாரண தொகையாக வழங்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அந்த தொகையையும் அரசு வழங்கும். இந்த வழக்கில் முதலில் புகார் செய்த மாணவியிடம் குற்றவாளிகள் 2 பவுன் நகையை பறித்து இருந்தனர். அந்த நகை வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அந்த நகை மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும், கோடை விடுமுறைக்கு பின்னர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்து இருப்பதாக அவர்களது தரப்பு வக்கீல்கள் தெரிவித்தனர்.

Read Entire Article