பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை

8 hours ago 2

கோவை,

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நந்தினி தேவி, இன்று 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு கடந்து வந்த பாதை பின்வருமாறு;

தமிழகத்தை உலுக்கிய கொடூரம்;

2019 பிப்ரவரி தொடக்கம்:- பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2019 பிப்.12:- பாலியல் வன்கொடுமை தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.

2019 பிப்.24:- புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

2019 மார்ச்.5:- தலைமறைவாக இருந்து வீடியோ பதிவு வெளியிட்ட திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். அவரது செல்போனில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம்

2019 மார்ச் கடைசி:- இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

2019 ஏப்.25:- சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், லேப்டாப்களில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன.

குற்றப்பத்திரிகை தாக்கல்

2019 மே.24:- பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகள் சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

2021 ஜன.6:- வழக்கில் தேடப்பட்டு வந்த அருளானந்தம், ஹெரன்பால், பாபு ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. 3 பேரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டதால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

2021 பிப்.22:- அருளானந்தம், ஹெரன்பால், பாபு ஆகியோர் மீது 2-வது கூடுதல் குற்றப்பத்திரிகை கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

2021 ஆக.16:- 9-வது குற்றவாளியான அருண்குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

2024 பிப்.23:- சி.பி.ஐ. கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பித்த நிலையில் 9 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

2025 ஏப்.5:- குற்றம்சாட்டப்பட்ட 9 பேரிடம் கேள்விகள் கேட்பதற்காக கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

2025 ஏப்.28:- இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் மே மாதம் 13-ந் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று கோவை மகளிர் நீதிமன்றம் தெரிவிக்கப்பட்டது.

2025 மே 13 (இன்று):- காலை 10.30 மணிக்கு குற்றம் சுமத்தப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்தான் என்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, 12.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

5 ஆண்டுகளாக விசாரித்து தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி

பொள்ளாச்சி பாலியல் வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வந்தார். இடையில் அவருக்கு பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கை அவர் விசாரித்து வந்தார்.

குற்றவாளிகள் 9 பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 76 விதமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து 12 ஆவணங்கள் குறிக்கப்பட்டன. 11 ஆவணங்களை நீதிமன்றமே தானாக எடுத்துக்கொண்டது. குற்றவாளிகளிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்பட 30 பொருட்கள் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்களும், 48 சாட்சியாக இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை. மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டன.

இத்தனையையும் அலசி ஆராய்ந்த நீதிபதி நந்தினி தேவி இன்றைக்கு 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Read Entire Article