
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஜூன் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாத சூழலில் இந்த தொடரில் இடம்பெற போகும் வீரர்கள் யார் யார்? என்பது குறித்த ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ள அவர் இங்கிலாந்து தொடரின் மூலம் முதன் முறையாக டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீப காலமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு இந்த வாய்ப்பை வழங்க தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.