
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ந்தேதி சுற்றுலாவாசிகள் பொழுது போக்கி கொண்டிருந்தபோது, ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் சிலர் வந்தனர். அவர்கள் ஆண்களாக குறி வைத்து சுட்டு வீழ்த்தினர். அதிலும், சந்தேகம் தீர சிலரிடம் உங்களுடைய மதம் என்னவென்று கேட்டு விட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசி உள்பட 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முன்னெடுத்தது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன.
இந்திய ஆயுத படைகள் கடந்த 6-ந்தேதி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளையும், பயங்கரவாதிகளையும் குறி வைத்து தாக்கியது. இதில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் தரப்பில் இருந்து டிரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், அவற்றை இந்தியா முறியடித்தது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. 4 நாட்களுக்கு நீடித்த இந்த போர் பதற்றம், பின்னர் ஒரு முடிவுக்கு வந்தது. இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தமும் ஏற்பட்டது. எனினும், எல்லை பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, 140 கோடி இந்தியர்களும், ஆயுத படைகளுக்கும் மற்றும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக நின்றனர்.
ஆயுத படைகள் பாகிஸ்தானுக்கு எதிராக தீரத்துடன் போர் புரிந்தன. பாகிஸ்தானுக்கு, நாம் தாக்கினால் இந்தியாவிடம் இருந்து தக்க பதிலடி கிடைக்கும் என தெரியும். பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுத்த ஆயுத படைகளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம். ஆயுத படைகளுக்காக ஒட்டு மொத்த நாடும் பெருமை கொள்கிறது என கூறியுள்ளார்.