பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு

4 hours ago 2

கோவை,

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோக்கள் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரன்பால், பாபு. அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு சிபிஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கில் அண்மையில் அரசு தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர். இந்த 9 பேரிடமும் தனித்தனியாக சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கேள்விகளும் இதற்காக குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அளித்த பதில்களும் வீடியோ சாட்சியங்களுடன் பதிவு செய்யப்பட்டன.

இரு தரப்புக்குமான விசாரணை நிறைவடைந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ம் தேதி (நாளை) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் 77 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் பொள்ளாச்சி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி நந்தினிதேவியும் ஒருவர். அவர் கரூர் மாவட்ட குடும்ப நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். இதற்கிடையே பொள்ளாச்சி வழக்கு காரணமாக மறு உத்தரவு வரும் வரை நீதிபதி நந்தினிதேவி அதேகோர்ட்டில் பணி புரிவார் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தது. இதன் காரணமாக நீதிபதி நந்தினிதேவி கோவையிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

தீர்ப்பு அறிவிக்கப்படும் என உத்தரவிடப்பட்டு இருப்பதால் குற்றவாளிகள் அனைவரும் நாளை (13-ந் தேதி) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தீர்ப்பு விவரங்களை நாளை காலையோ அல்லது மதியத்துக்கு பிறகோ நீதிபதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக வக்கீல்கள் தெரிவித்தனர். இதையொட்டி நாளை கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

 

Read Entire Article