'எடப்பாடி பழனிசாமி கட்சியை காப்பாற்றியது போல் தமிழகத்தையும் காப்பாற்றுவார்' - காயத்ரி ரகுராம்

3 hours ago 1

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பாண்டிபஜாரில் அ.தி.மு.க. சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கறவை பசுக்கள், கன்றுகுட்டிகள் தானம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக வருவார். நிறுத்திவைக்கப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவார். தி.மு.க.வினர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், 10 திட்டங்களை கூட முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை மற்றும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தி.மு.க. அலட்சியமாக இருந்து வருகிறது. இதை எல்லாம் சரிசெய்யக்கூடிய, நிர்வாகம் தெரிந்த கட்சி அ.தி.மு.க. மட்டும்தான்.

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். தி.மு.க.விற்கு ஜென்ம எதிரி அ.தி.மு.க.தான். எடப்பாடி பழனிசாமி கட்சியை எப்படி காப்பாற்றினாரோ, அதே போல் தமிழகத்தையும் காப்பாற்றுவார்."

இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

Read Entire Article