
புதுடெல்லி,
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை இன்று வெளியிட்டார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள கோலி, அதில் 40 போட்டிகளில் வெற்றியை கைப்பற்றி, இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார். இந்த சூழலில் தற்போது ஓய்வு பெற்றுள்ள விராட் கோலிக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி அவருடைய இளமை கால பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா கூறும்போது, இந்திய கிரிக்கெட்டுக்கு மிக பெரிய அளவில் பங்காற்றியதற்காக அவருக்கு என்னுடைய வணக்கங்கள். நாட்டுக்காக அவர் செய்த விசயங்களுக்காகவும் மற்றும் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக செய்துள்ள விசயங்களுக்காகவும், அவரை குறித்து நான் பெருமை கொள்கிறேன் என்றார்.
அவருடைய முடிவை பாராட்டுவதுடன், ஆதரிக்கிறேன். ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்காக அவர் விளையாடுவார் என நம்புகிறேன். அதில், 100 சதவீதம் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு அவர் செயல்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.