பொள்ளாச்சி சிடிசி மேட்டில் ரூ.8 கோடியில் அமையும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி 80 சதவீதம் நிறைவு

2 hours ago 1

*விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சிடிசி மேட்டில் ரூ.8 கோடியில் அமையும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஓரிரு மாதங்களில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரமான பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் எதிர் எதிரே புதிய மற்றும் மத்திய பஸ் நிலையங்கள் உள்ளது.

புதிய பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு கிராமங்கள் மற்றும் வால்பாறை, கேரள மாநில பகுதிக்கு செல்லும் பஸ்களும், மத்திய பஸ் நிலையத்திலிருந்து கிராமப்புறங்களுக்கு மட்டுமின்றி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை மற்றும் இரவு நேரத்தில் தென் மாவட்ட பகுதிகளுக்கும், சென்னைக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த இரு பஸ் நிலையங்களிலிருந்து தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் என சுமார் 250க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் எண்ணிக்கை, அதன் நெருக்கடி என்பது சற்று அதிகமாகவே உள்ளது.

சமீபத்தில் நகரின் மையப்பகுதியில் உள்ள ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டாலும், வெளியூர் பஸ்கள் அதிகளவு வந்து செல்வதற்கான போதிய வசதி இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, நகர் நிர்வாக மானிய கோரிக்கையில் பொள்ளாச்சி நகராட்சிக்கு பல்வேறு புதிய பணிகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்றான, பொள்ளாச்சி கோவை ரோட்டில் நகரை தொட்டுள்ள சிடிசி மேடு பகுதியில் ரூ.8 கோடியில் புதிதாக புறநகர் பஸ் நிலையம் அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த சிடிசி மேட்டில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய பஸ் நிலையம் மற்றும் ஆம்னி பஸ்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டால், தற்போது நகரில் ஆங்காங்கே ஏற்படும் போக்குவரத்து நெரிசல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்ற நிலையில், புதிய பஸ் நிலையம் அமையும் பகுதிக்கான இடம், அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கோவை ரோட்டோரத்தில் புதிய பஸ் நிலையம் அமையபெறும்போது, வாகனங்கள் எளிதாக வந்து செல்லவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பாதைகள் அமைப்பதற்காக, நவீன கருவியை கொண்டு அளவீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, நகரின் மையப்பகுதியில் உள்ள பஸ் நிலையத்தால், பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பல ஆண்டுகளுக்கு பிறகு மற்றொரு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, கோவை ரோடு சிடிசி மேட்டில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக பஸ் நிலையத்திற்கான கட்டுமான பணி சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் புறநகர் பஸ்கள் வந்து செல்வதற்காக, பஸ் நிறுத்தும் ரேக்குகள் அமைக்கும் பணியும், பயணிகள் நிழற்கூரையும், வர்த்தகம் சம்பந்தமாக கடைகள் அமைக்கும் பணியும், பயணிகளுக்கு நவீன கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

இதுவரை சுமார் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இன்னும் சுற்று சுவர் பஸ் வந்து செல்லும் பகுதியில் போதுமான வசதி ஏற்படுத்துவதற்கு கூடுதல் நிதி ஏற்படுத்தி கட்டுமான பணியை விரைவுப்படுத்தி இன்னும் ஓரிரு மாதங்களில் விரைந்து நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றான, மக்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கியதுடன், அதற்கான அரசாணையும் வெளியிட்டார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பொள்ளாச்சிக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விரைவில் புதிய பஸ் நிலைய பணியை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைவதுடன் வாகனங்கள் விரைந்து செல்ல ஏதுவாக இருக்கும். இந்த புதிய பஸ் நிலையமானது, பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதி பொதுமக்களுக்கு பெரியளவில் பயன்பாடாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது’’ என்றார்.

The post பொள்ளாச்சி சிடிசி மேட்டில் ரூ.8 கோடியில் அமையும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி 80 சதவீதம் நிறைவு appeared first on Dinakaran.

Read Entire Article