சென்னை: தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்ட அறிக்கையில், ”
நாளுக்கு ஒரு பிரச்சனை, வேலைக்கு ஒரு கருத்து என்று ஏதாவது திராவிட மாடல் அரசை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் ஒரு முறை தன் அரைவேக்காட்டுத் தனத்தை நிருப்பித்துள்ளார். திராவிட மாடல் அரசு இதுவரை என்ன செய்தது என்று முழு விவரங்களையும் கேட்டுக் தெரிந்துக் கொள்ளமால் இன்று கடமைக்காக ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் விவசாய பிரச்னை எனத் தொடங்கி, சட்டம் ஒழுங்கு என பல்வேறு புலம்பல்களைச் சொல்லி மீண்டும் மீண்டும் திமுகவை வம்புக்கு இழுக்கிறார். குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்று அறிவித்தை சுட்டிக்காட்டி அர்த்தமற்ற, அவசியமில்லாத, தொடர்பற்ற வினாவினை எழுப்பியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு எண்.33-ல் தெரிவித்துள்ள சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்கடன் மற்றும் நகை கடன்களை தள்ளுபடி செய்து அவற்றிற்கு போதிய நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்து அவர்கள் பெற்ற கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசுதான் என்ற விவரம் கூட தெரியாமால் பா.ஜ.க. தலைவர் தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
31.1.2021 அன்று வரை கூட்டுறவு சங்கங்களின் சிறு, குறு விவசாயிகள் 16,43,347 நபர்கள் பெற்றிருந்த பயிர்கடன்கள் ரூ.12,110.74 கோடி அளவிலான தள்ளுபடிக்கான தொகையை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தின் நிதிநிலை கடந்த கால அரசால் கஜானா காலி செய்த நிலையிலும் விவசாயிகள் பாதிக்கப்பட கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு அதற்கு நிதி ஒதுக்கி விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாய பெருங்குடி மக்களின் வாழ்கையை காப்பாற்றியது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு. ஆட்சி பொறுப்பேற்ற பின் 2021-2022ம் ஆண்டில் முதல்முறையாக ரூ.10,635.37 கோடி பயிர் கடன்களை 15,44,679 விவசாயிகளுக்கு வழங்கியது. 31-3-2025 வரை நான்கு ஆண்டு காலத்தில் ரூ.61007.65 கோடி பயிர் கடன்களை 79,18,350 விவசாய பெருமக்களுக்கு கடனாக வழங்கியுள்ளது.
கூட்டுறவுத்துறையில் கடன்கள் வழங்குவது மட்டுமின்றி பல்வேறு விதமான சேவைகளை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு சேவைகளை தமிழக முதல்வர் ஆலோசனையின் படி கூட்டுறவுத்துறை சிறப்பாக செய்து வருகிறது. புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றக் காலங்களில் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவிகள் எதையும் ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுத் தராமல் அண்ணாமலை சிறுபிள்ளைத்தனமாக அரைவேக்காடு அறிக்கையினை விடுத்து தான் குழம்புவது மட்டுமல்லாமல், மக்களையும் குழப்பும் நோக்கத்தோடு செயல்படும் பா.ஜ.க மாநில தலைவரின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post சிறுபிள்ளைத்தனமாக அரைவேக்காடு அறிக்கையை விடுப்பதா? :அண்ணாமலைக்கு அமைச்சர் பெரியகருப்பன் கடும் கண்டனம் appeared first on Dinakaran.