பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு; இதுவரை 23,000 சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனை: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

3 months ago 11

சென்னை: சென்னை நகரின் பொது போக்குவரத்து ஆதாரங்களாக மாநகர பேருந்து, புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ஆகியவை இருக்கின்றன. சென்னையில் தினமும் பயணம் மேற்கொள்பவர்களும், அவ்வப்போது பயணம் செய்வோரும் சில சமயங்களில் பேருந்து, மெட்ரோ, ரயில் என 3 வகையான போக்குவரத்து சேவைகளையும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் மாநகர பேருந்து, புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்களில் ஒரே பயண அட்டையை வைத்து பயணிக்கும் வகையில் பொது இயக்க அட்டை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதன்மூலம் தினமும் பயணம் மேற்கொள்பவர்கள் ஒவ்வொரு முறையும் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த திட்டத்தை செயல்படுத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், மாநகர் போக்குவரத்து கழகம், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் என பல அரசு துறையினர் பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், முதல் முறையாக, 2023ம் ஆண்டு சிங்கார சென்னை அட்டை என்று லேபிள் ஒட்டப்பட்ட, தேசிய பொது இயக்க அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், கடந்த 6ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த அட்டையை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. மாநகர பேருந்துகளில் இந்த சிங்கார சென்னை அட்டை உட்பட கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் யுபிஐ உள்ளிட்டவை மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வகையில் மின்னணு டிக்கெட் இயந்திரம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் பேருந்துகளில் சில்லறை பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்தது. இந்நிலையில் சிங்கார சென்னை பயண அட்டை பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று, இதுவரை 23,000 சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனையாகியுள்ளது. மேலும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே மாதத்தில் ₹40 லட்சம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில், மாநகர பேருந்து உள்ளிட்டவைகளில் பயணம் மேற்கொள்வதற்கான ஒரே பயண திட்டமாக சிங்கார சென்னை பயண அட்டை கடந்த ஜனவரி 6ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 50 ஆயிரம் அட்டைகள் பிராட்வே, சென்ட்ரல், தாம்பரம், கோயம்பேடு, திருவான்மியூர் உள்ளிட்ட 20 இடங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், பஸ் கண்டக்டர்களிடம் சில்லரை பிரச்னை இல்லை, எளிதில் பணம் பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரை 23,000 சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனையாகியுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கார்டை பயன்படுத்தி இதுவரை ₹40 லட்சம் வரை பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணிகள், எம்டிசி பேருந்து சேவைகளுக்கு இதனை பயன்படுத்துகின்றனர். இந்த அட்டையை பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் வகையில் தற்போது 3,900 பேருந்துகளில் மின்னணு இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது. இந்த கார்டை போன் ரீசார்ஜ் செய்வது போல ஜிபே மற்றும் போன் பே மூலமாக ₹100 முதல் ₹2000 வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு; இதுவரை 23,000 சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனை: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article