‘‘ஊழல், சர்ச்சை, மெமோ, டிரான்ஸ்பர் உத்தரவு என எதையும் மதிக்காமல் இருந்த இடத்தில் பசையாக ஒட்டிக்கொள்கிறாராமே பெண் அதிகாரி ஒருத்தர்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சியில் பணிபுரியும் பெண் உதவி நகரமைப்பு அலுவலர்கள் ரெண்டு பேருக்கு கடந்த அக்டோபர் 7ம் தேதி நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம் சார்பில் இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ‘ஜெய’மான பெயர் கொண்ட பெண் அதிகாரி உடுமலை நகராட்சிக்கும், நான்கெழுத்து பெயர் கொண்ட இன்னொருவர், மன்னார்குடி நகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டாங்க…
இவர்களில் நான்கெழுத்து பெயர் கொண்ட பெண் அதிகாரி, தனது தந்தை இறந்துவிட்டதாக கூறி, கருணை மனு அளித்து, இடமாற்றத்தை ரத்து செய்து, இங்கேயே பணியை தொடர்கிறார். ‘ஜெய’மான பெயர் கொண்ட பெண் அதிகாரி இடமாறுதல் உத்தரவை மதிக்காமல், இங்கேயே ‘பசை’யாக ஒட்டிக்கொண்டாராம்.. இவர், இலைக்கட்சி முக்கிய அரசியல் புள்ளியை சிபாரிசுக்காக பிடித்து வைத்துக்கொண்டு தனது இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறாராம்.. இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும் இங்கேயே பணியை தொடர்ந்து வருகிறார்.
இவர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்தே இங்கேயே பணி செய்து வருகிறார்.. தற்போதும் இலைக்கட்சி முக்கிய பிரமுகரின் ஆசி உள்ளதாம்.. கோவை மாநகராட்சியில் மேல்மட்ட அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கும் பல முக்கிய முடிவுகள் குறித்து, இலைக்கட்சி வி.ஐ.பி.க்கு தகவல் தெரிவித்து வருகிறாராம்.. இவர், ஏற்கனவே கிழக்கு மண்டலத்தில் பணிபுரிந்தபோது, டிஜிட்டல் சர்வே செய்ததில் பல கோடி ஊழல் புரிந்ததாகவும், சட்ட விதிகளை மீறி பல புரமோட்டார்களுக்கு கட்டிட அனுமதி வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக, பலமுறை 17பி மெமோ சார்ஜ் வாங்கியுள்ளார்.
தற்போது, மேலதிகாரி பிறப்பித்த டிரான்ஸ்பர் உத்தரவை மதிக்காமல், இங்கேயே ஒட்டிக்கொண்டு இருப்பதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பொதுக்குழு கூட்டத்தில் சேலத்துக்காரரை ஐஸ் வைக்க படாதபாடு பட்ட மாஜி அமைச்சர் கனவு நிறைவேறாம போச்சாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘தலைநகரில் இலை கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், மாஜி அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டாங்க..
டெல்டா மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர்களும் பங்கேற்றாங்க.. இதில், மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த மாஜியானவர் சேலத்துக்காரரின் அருகே அமர்ந்து விட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்தாராம்.. ஆனால், கடைசி வரைக்கும் அவரால் அந்த இடத்தை பிடிக்க முடியவில்லையாம்.. ஒருவேளை சேலத்துக்காரர் அருகே அமர்ந்திருந்தால், அதை வைத்து டெல்டாவில் அரசியலை செய்ய மாஜி அமைச்சர் திட்டமிட்டு இருந்தாராம்.. ஆனால், அவரது கனவு கடைசி வரையிலும் நடக்காம புஸ்வாணமாகி விட்டதாம்…
இதனால் மாஜி அமைச்சருக்கு எதிராக உள்ள நிர்வாகிகள் செம குஷியில் இருந்து வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அரசு ஓட்டலை விலைபேசிய விவகாரம் முடியும் முன், சிறப்பு மிக்க பஞ்சாலை ஒன்றை விலைக்கு கேட்டது அடுத்த சர்ச்சையாகி இருக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் அரசு ஓட்டலை அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒருவரிடம் விலை பேசிய விவகாரத்தில் பிரபல நடிகையின் கணவரும், இயக்குனருமான ஒருவர் சிக்கினார். நேரடியாக அவர் விலை பேசவில்லை என்று இருதரப்பும் கூறினாலும் இந்த விவகாரம் சர்ச்சையாகி விட்டது.
இந்த பரபரப்புக்கு இடையே வரலாற்று சிறப்புமிக்க பஞ்சாலை ஒன்றை, வெளியூர் பிரபலமானவர் புல்லட்சாமி அரசிடம் விலைக்கு கேட்டுள்ள விவகாரம் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட தொகைக்கு ஆலையை தன்னிடம் கொடுத்துவிட்டால், தானே அதை ஏற்று நடத்துவதாக தடாலடியாக பிரபலம் அறிவிக்கவே, அவருக்கு அரசியல் பிரமுகர்கள் சிலரும் ஆதரவுக்கரம் நீட்டி உள்ளார்களாம். இருப்பினும் புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமானவை ஒவ்வொன்றாக வெளியூர் பிரபலங்களால் விலை பேசப்படுவதால் உள்ளூர் மக்கள் கடுமையான கொந்தளிப்பில் இருக்கிறார்களாம்..
ஓட்டலை தொடர்ந்து ஆலை விவகாரமும் அடுத்த சர்ச்சையாகி வலைதளத்தில் பரவி வருவதோடு இதன் தாக்கம் அடுத்து வரவுள்ள தேர்தலில் எதிரொலிக்கலாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நாம் விரும்பும் கூட்டணியை அமைப்போம் என்று இலைக்கட்சி தலைவர் சொன்னதை கேட்டு தொண்டர்கள் சிரிச்சிக்கிட்டே போனாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பொதுக்குழுவை முடிச்சிட்டு சொந்த ஊர் வந்த இலைக்கட்சி தலைவர் ரொம்பவே ஹேப்பியா இருந்தாராம்.. வீட்டுக்கு வந்தால் ஒரு சிலரின் கோஷம் மட்டும் இருக்குமாம்..
அதன்பிறகு எலுமிச்சை, துண்டுகளை வாங்கிக்கொண்டு அனைவரும் வீட்டுக்கு போங்கன்னு மட்டும்தான் சொல்வாராம்.. ஆனால் இம்முறை எல்லோரும் நல்லா சாப்பிட்டீங்களான்னு சிரிச்சிக்கிட்டே கேட்டாராம்.. ஏனென்றால், அவருக்கு வணக்கம் போட்டவங்க எல்லோரும் பொதுக்குழுவில் கலந்துகிட்டவங்களாம்.. அங்கு மட்டன் பிரியாணி, சிக்கன், பொரித்த மீன், முட்டை என அனைத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாம்.. அதனால்தான் நல்லா சாப்பிட்டீங்களான்னு ஒரு செம்ம கேள்விய கேட்டாராம்..
இதுவரை இதுபோன்ற கேள்வியை தலைவர் கேட்டது இல்லையேன்னு மெய்சிலிர்க்க சொல்லிக்கிட்டு போனாங்களாம்.. இதற்கிடையில் இலைக்கட்சியை கூட்டணியில் இணைத்தே தீருவேன் என சைக்கிளில் இருந்து பொறுப்புகளை துறந்துவிட்டு வெளியே வந்த மஞ்சள் மாவட்ட கதர் வேட்டிக்காரர் வரிந்துக் கட்டிக் கொண்டு இலைக்கட்சியின் தலைவரை போய் சந்திச்சாராம்.. மஞ்சளூரில் நடந்த தேர்தலில் தனக்கு சீட் கிடைக்கும் என மிகுந்த ஆவலோடு காத்திருந்தாராம்.. அதுவும் இலைக்கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ஒத்தைக்காலில் நின்றாராம்.. ஆனால் அவரது தலைவரோ மலராத கட்சியுடன் போய் சேர்ந்துக்கிட்டாராம்..
இதனால் பொறுப்புகளை உதறிவிட்டு வெளியே வந்தாராம்.. இம்முறை தலைமை கதர்வேட்டிக்காரரை கூட்டணிக்கு இழுத்துக்கிட்டு வந்திடுவேன்னு இலைக்கட்சி தலைவரை பார்த்து சத்தியம் செஞ்சிக்கிட்டு சென்றாராம்.. இவரது சந்திப்பு இலைக்கட்சி தொண்டர்களை நகைப்படைய வச்சதாம்.. ஊருக்கு ரெண்டுபேரு.. இவர்களோடு கூட்டணி சேர்ந்தால் வெற்றி எப்படி கிடைக்கும். இதைத்தான் தலைவரு நாம் விரும்பும் கூட்டணியை அமைப்போமுன்னு சொன்னாரான்னு சிரிச்சிக்கிட்டே போனாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post பொதுக்குழுவில் சேலத்துக்காரர் பக்கத்தில் அமரவேண்டும் என்ற மாஜி அமைச்சரின் கனவுகூட நிராசையானது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.