பொது சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க த.வெ.க. திட்டம்

3 days ago 2

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க. , வி.சி.க., ம.தி.மு.க., பா.ம.க., த.வெ.க. நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொது சின்னம் கேட்டு டிசம்பர் மாதம் விண்ணப்பிக்கப்பட இருக்கிறது. இதற்காக கட்சியின் தலைவர் விஜய் தற்போது கட்சிக்கான சின்னத்தை தேர்வு செய்யும் பணியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளார். பொதுவாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அவர்களது கட்சி சின்னங்களில் தேர்தலில் போட்டியிடுவார்கள்.

பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்குகிறது. 234 தொகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னம் வழங்குவது வழக்கம்.

இதற்காக தேர்தல் நடக்கும் காலக்கட்டத்தில் இருந்து 6 மாதத்திற்கு முன்பே தேர்தல் ஆணையத்தில் பொது சின்னத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு வரும் டிசம்பர் மாதத்தில் தங்களது கட்சிக்கு பொது சின்னத்தை கேட்டு தமிழக வெற்றிக் கழகம் விண்ணப்பிக்க இருக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள சுயேச்சை சின்னத்தில் மூன்றை தேர்வு செய்து தங்களுக்கான பொது சின்னத்தை கேட்க த.வெ.க. திட்டமிட்டுள்ளது.

பொது சின்னத்தை தேர்வு செய்து, டிசம்பரில் தேர்தல் ஆணையத்தில் த.வெ.க. விண்ணப்பிக்கும்பட்சத்தில், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் காலக்கட்டத்திற்கு முன்பு சின்னம் ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறு பொது சின்னம் ஒதுக்கப்பட்டால் அதனை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

தி.மு.க.வுக்கு உதயசூரியன், அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை போல தனது கட்சிக்கு மக்களை எளிதில் கவரும் சின்னத்தை பெற வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். அந்தவகையில், ஆட்டோ, பேட், பட்டம், உலக உருளை, தொப்பி, அகல் விளக்கு ஆகிய சுயேச்சை சின்னங்கள் த.வெ.க. விருப்ப பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஏதாவது ஒன்றையோ அல்லது வேறு ஒரு சின்னத்தையோ தேர்தல் ஆணையத்தில் கேட்க த.வெ.க. முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக விஜய், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இது குறித்து த.வெ.க. நிர்வாகிகள் கூறும்போது, 'எங்கள் கட்சி சின்னம் குறித்து தலைவர் விஜய் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருப்பார். அந்த சின்னம் தேர்தல் கமிஷனில் முறைப்படி பெற நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோ சின்னமாக கூட இருக்கலாம். வேட்டைக்காரன் படத்தில் எங்கள் தலைவர் ஆட்டோவில் வருவார். அந்த படம் மக்களை கவர்ந்தது. இருப்பினும் எந்த சின்னம் கிடைத்தாலும் அதை வெற்றி சின்னமாக அவர் மாற்றிக்காட்டுவார்' என்றனர்.

Read Entire Article