போர் நிறுத்தம்: ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியது

4 hours ago 1

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தளபதிகள் உள்பட 100 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதலை நடத்தின. தொடக்கத்தில் காஷ்மீர் மாநில எல்லையோர மாவட்டங்களில் சிறிய ரக பீரங்கி தாக்குதலை நடத்திய பாகிஸ்தான், திடீரென்று டிரோன்களை ஏவின. அவை அனைத்தையும் இந்தியா முறியடித்தது. காஷ்மீரை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

இதற்கெல்லாம் தக்க பாடம் கற்பிக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது டிரோன் தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதில் அந்த நாடு பலத்த அடிவாங்கியது. மோதல் ஒருபக்கம் நடந்து வந்த நேரத்தில் பாகிஸ்தானின் ராணுவ உயர் அதிகாரிகள், இந்திய ராணுவ உயர் அதிகாரிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும், பாக். துணை பிரதமரும் உறுதிப்படுத்தினார்.

மேலும் இது தொடர்பாக இருநாட்டு பாதுகாப்புத்துறை இயக்குனர்களும் நாளை(12-ந் தேதி) பேசுவார்கள் என்று தெரிவித்தார். இருநாட்டு தலைவர்களின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த தாக்குதல் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. எல்லாம் சுமுகமாக முடிந்தது என்று மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்ட நிலையில், ஒப்பந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே பாகிஸ்தான் மீண்டும் அடாவடியில் இறங்கியது.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், ஆக்னூர், பிர்பாஞ்சால் ஆகிய பகுதிகளில் இரவு 9 மணிக்கு மேல் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதை காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவும் உறுதி செய்தார். இதைத்தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் திருப்பி அடிக்கத்தொடங்கினர். பாகிஸ்தானின் அத்தனை டிரோன்களையும் நடுவானிலேயே தாக்கி அழித்தனர். "இதனிடையே எல்லைக்கோடு பகுதியில் தற்போது தாக்குதல் இல்லை" என்று இந்திய ராணுவம் நேற்று இரவு 10.30 மணியளவில் அறிவித்தது.

இந்த நிலையில், சண்டை நிறுத்தத்தால் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது. பதற்றமாக இருந்து வந்த ஜம்மு நகர சாலை அமைதியாக காட்சியளித்து வருகிறது. பூஞ்ச், அக்னூர், பிரோஸ்பூர், ரஜோரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. டிரோன்கள், துப்பாக்கி சூடு எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 'ரெட் அலர்ட்' நீடித்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உங்கள் வசதிக்காக மின்சார விநியோகத்தை மீட்டெடுத்துள்ளோம், ஆனால் இன்னும் சிவப்பு எச்சரிக்கையில் தான் இருக்கிறோம்"சைரன்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்; தயவுசெய்து யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம்; ஜன்னல்களுக்கு அருகில் யாரும் நிற்க வேண்டாம்; எங்களுக்கு பச்சை சிக்னல் கிடைத்ததும் நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்; தயவுசெய்து அச்சப்பட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article