திருத்தணி: திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்சேபனை ஏற்ற பொறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ சட்டமன்றத்தில் பேசினார். தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு உத்தரவின்பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட 1.6 கிமீக்கு அப்பால் உள்ள கிராம நத்தம், காலி மனை மற்றும் ஆட்சேபனை அற்ற அரசு புறம்போக்கு நிலங்களான கல்லாங்குத்து, பாறை புறம்போக்கு மற்றும் அனாதினம் வகைப்பாடு கொண்ட பகுதிகளில் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வரும் பொது மக்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த வகையில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா மேற்பார்வையில் வருவாய் துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி வசித்து வரும் நபர்களின் வீடுகளுக்கேச் சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பொதட்டூர்பேட்டை வருவாய் ஆய்வாளர் ராமு கூறுகையில், ஆட்சேபனை அற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வாழும் பொது மக்களுக்கு பட்டா வழங்க கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பட்டா பெற்றுக்கொள்ள ஏதுவாக குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், மின் இணைப்பு ரசீது ஆகியவற்றை அளித்து பட்டா பெற்றுக் கொள்ளலாம். கணக்கெடுக்கும் பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
The post பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் பட்டா இல்லாத வீடுகள் கணக்கெடுப்பு: வருவாய் துறையினர் தீவிரம் appeared first on Dinakaran.