சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்து அதிகப்படியான மக்கள் சென்னை திரும்பவுள்ளதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளன. திருச்சி, கோவை, நாகை, நெல்லை ஆகிய இடங்களில் இருந்து இன்று சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆம்னி பேருந்துகள் முன்பதிவு செய்யும் செயலிகள், இணையதளங்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் ஏற்படும் இந்த பிரச்னைக்கு தீர்வுக்கான தமிழக போக்குவரத்து துறை ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடன் பேச்சு நடத்தி கட்டணத்தை நிர்ணயித்தனர். அவர்கள் நிர்ணயித்த கட்டணம் அதிகமாக இருப்பதாக பலர் கூறிவந்த நிலையில் தற்போது பண்டிகை கால மக்கள் தேவை வைத்து இன்னும் கூடுதலாக சில ஆம்னி பேருந்துகள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு செல்ல படுக்கை வசியுடன் ஏசி பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.3,150 ஆக நிர்ணயித்து உள்ள நிலையில் தற்போது ரூ.3,500 முதல் ரூ.4,500 வரை வசூலிக்கப்படுகிறது.
அதேபோல நெல்லையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் படுக்கை வசியுடன் ஏசி பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.2,810 ஆக நிர்ணயித்து உள்ள நிலையில் தற்போது ரூ.3,600 முதல் ரூ.4,000 வரையும், இருக்கை வசியுடன் ஏசி பேருந்துக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3000 வரையும், திருச்சியில் இருந்து படுக்கை வசியுடன் ஏசி பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.1,680 ஆக நிர்ணயித்து உள்ள நிலையில் தற்போது ரூ.2,500 முதல் ரூ.3,500 வரையும், இருக்கை வசியுடன் ஏசி பேருந்துக்கு ரூ.1,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.2000 வரை வசூலிக்கப்படுகிறது.
கோவையில் இருந்து படுக்கை வசியுடன் ஏசி பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.2,460 ஆக நிர்ணயித்து உள்ள நிலையில் தற்போது ரூ.2,800 முதல் ரூ.3,500 வரையும், மதுரையில் இருந்து சென்னைக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.2,330 ஆக நிர்ணயித்து உள்ள நிலையில் தற்போது ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு ரூ.2,000 முதல் 4,000 வரை கட்டணம் நிர்ணயித்து வசூலித்து வருகின்றனர். பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க போக்குவரத்து துறை தரப்பில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட விதிகளை மீறி செயல்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது சென்னை திரும்பும் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பண்டிகை காலத்தை மையமாக வைத்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்ந்து நடைபெறும் நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
* புகார் அளிக்க
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற டோல் ப்ரீ எண் மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்கிற எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
The post பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப ஆம்னி பஸ்களின் கட்டணம் பல மடங்கு உயர்வு appeared first on Dinakaran.