சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால் பேருந்துகள், ரயில்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளன. கிராமங்களை பொறுத்தவரை தொடர்ந்து 3 நாட்கள் பொங்கல் விழா களைகட்டி இருக்கும். தை முதல் நாளில் தைப்பொங்கல், மறுநாள் மாட்டுப்பொங்கல், அதை தொடர்ந்து காணும் பொங்கல் என்று கொண்டாட்டங்கள் நிறைந்து காணப்படும். பொங்கல் பண்டிகை என்றாலே தித்திக்கும் கரும்பு, சர்க்கரை பொங்கல் தான் நினைவுக்கு வரும். புதுப்பானையில் மஞ்சள் கொத்து கட்டி, பச்சரிசி, வெல்லம் பால் ஊற்றி பொங்கல் வைக்கப்பட்டு, உயிர்கள் வாழ ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கலை படையலிட்டு வழிபடுவது வழக்கம். இந்த பொருட்களின் விற்பனை கடந்த சில நாட்களாக களைக்கட்டி இருந்தது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு புத்தாடை விற்பனை களைக்கட்டியது. சென்னை போன்ற நகரங்களில் தங்கி பணியாற்றுவோர், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்புவர். அந்தவகையில் பொதுமக்கள் வசதிக்காக போக்குவரத்து துறை தரப்பில் ஆண்டுதோறும், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 21,904 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்பு பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த இடங்களுக்கு செல்ல மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அதன்படி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை , காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது. வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்தும், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மப்சல் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த 3 இடங்களில் பேருந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவல் துறையினர், போக்குவரத்து கழக பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் சொந்தமாக கார்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டனர். பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் கூட்டத்திற்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் நேற்று 1,314 சிறப்பு பேருந்துகளும், பிற பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 1,500 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மொத்தமாக இயக்கப்பட்ட 3,406 பேருந்துகளில் 1,87,330 பயணிகள் பயணித்தனர். நேற்றைய தினமும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 3,780 பேருந்துகளும், பிற முக்கிய இடங்களில் இருந்து 1,850 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 1.10 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். சராசரியாக நேற்று ஒரேநாளில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் முலம் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி இம்முறை 6 முதல் 9 நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைக்கிறது. ஜன.11ம் தேதி முதல் 19ம் தேதி வரை அதிகபட்சமாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் சூழல் உள்ளது. ஐடி நிறுவனங்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்ட சனி, ஞாயிறு விடுமுறை உள்ள பலரும் நேற்றைய முன்தினமே தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணத்தை தொடங்கினர். பேருந்துகளை போல ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுடன் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது. ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது, அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லா பெட்டிகளில் இடம் பிடிக்க பலர் முண்டியடித்து ரயில்களில் ஏறினர். பொதுப்போக்குவரத்து தவிர பலரும் தங்கள் சொந்த கார்களில் பயணத்தை தொடங்கினர், இதனால் செங்கல்பட்டு, விழுப்புரம் நெடுஞ்சாலைகள் மற்றும் அதில் உள்ள சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
The post பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள் பேருந்து, ரயிலில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.