
கோத்ரா,
குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் பைக் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், பைக்கில் சென்ற நபர் மற்றும் அவரது 3 மகள்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நேற்று மதியம் கோகாம்பா தாலுகாவில் உள்ள தங்கள் கிராமத்தில் இருந்து சாரங்பூர் நோக்கி ராஜேந்திரசிங் சவுகான் (36 வயது) என்ற நபர் தனது 3, 9, 12 மற்றும் 13 வயது மகள்களுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கோத்ரா பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் ராஜேந்திரசிங் மற்றும் அவரது மூன்று மகள்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவரது நான்காவது மகள் (3 வயது) காயங்களுடன் உயிர் தப்பினார். அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.