பேஸ்புக் தோழியை திருமணம் செய்ய ஆசை: சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்தியர் கைது

6 months ago 14

லாகூர்:

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாதல் பாபு (வயது 30). இவருக்கும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த சனா ராணி (வயது 21) என்ற பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் நட்பு உருவானது. இந்த நட்பினால் ஈர்க்கப்பட்ட பாதல் பாபு, அந்த பெண்ணை காதலிக்கத் தொடங்கி உள்ளார். பின்னர், நேரில் சந்தித்து பேசி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

ஆனால், முறையான பயண அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். கடந்த வாரம், சம்பந்தப்பட்ட பெண் வசிக்கும் மவுங் கிராமத்தை அடைந்தபோது அவரை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, பாபு தனது காதல் கதையை போலீசாரிடம் கூறியதுடன், பேஸ்புக் தோழியை திருமணம் செய்ய விரும்பி வந்ததாக கூறியிருக்கிறார். எனினும் சட்டப்பூர்வ ஆவணங்கள் ஏதுமின்றி பயணம் செய்ததால் வெளியுறவுச் சட்டப் பிரிவுகளின் கீழ் பாபு கைது செய்யப்பட்டார்.

பின்னா அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அடுத்தகட்ட விசாரணை 10-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சனா ராணியிடம் போலீசார் விசாரித்தபோது, பாபுவுடன் நட்பாக பழகியதாகவும் அவரை திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். அவரது வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

Read Entire Article