
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி 'சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார்.
மதுரை, உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் இன்று காலை உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சமூகநீதி விடுதிகள் என பெயர் மாற்றம் செய்து மூன்று நாட்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது தி.மு.க. ஆட்சி வெறும் விளம்பர மாடல் ஆட்சி என்று தெள்ளத்தெளிவாக உணர்த்திவிட்டது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மதுரை, உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி அரசு மாணவர் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
சமூகநீதி விடுதிகள் என பெயர்மாற்றம் செய்து மூன்று நாட்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது தி.மு.க. ஆட்சி வெறும் விளம்பர மாடல் ஆட்சி என்று தெள்ளத்தெளிவாக உணர்த்திவிட்டது. எனவே, இனியும் எத்தனை பெயர்சூட்டு விழாக்கள் நடத்தினாலும், மேடைகளில் முழங்கினாலும் மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளாத தி.மு.க. அரசை இன்னும் சில மாதங்களில் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக தூக்கியெறிவர் என்பது திண்ணம்!" என்று தெரிவித்துள்ளார்.