பேருந்து நிலைய மேற்கூரை சிமென்ட் பூச்சு விழுந்ததில் பயணி காயம்

1 week ago 3

திருவள்ளூர்: மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் திருவிக பேருந்து நிலையம் உள்ளது. இந்தப் பேருந்து நிலையம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூண்டி, உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பேருந்து நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்தநிலையில் நேற்று திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் வாணியம்பாடியைச் சேர்ந்த அப்துல் சலீம் (59) என்பவர் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.

பேருந்து வர தாமதமாகவே அவர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது, மேற்கூரையில் இருந்த சிமென்ட் பூச்சுகள் திடீரென உதிர்ந்து அவர் மீது விழுந்தது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் திருவள்ளூர் ஐசிஎம்ஆர் அருகே உள்ள வேடங்கிநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனை உடனடியாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டுமென பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பேருந்து நிலைய மேற்கூரை சிமென்ட் பூச்சு விழுந்ததில் பயணி காயம் appeared first on Dinakaran.

Read Entire Article