பேரிடர்களுக்கு காரணம் மித மிஞ்சிய பொருள் நுகர்வு

2 weeks ago 3

*அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாமில் தகவல்

மஞ்சூர் : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகா கவி பாரதியார் நினைவு நுாற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் குன்னுார் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை பாபி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மனோகரன் கலந்து கொண்டு பேசியதாவது: உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் போன்ற பொருளாதார கொள்கைகள் வந்த பிறகு மக்கள் தொகை மிகுந்த இந்திய நாட்டில் பொருள் நுகர்வு அதிகரித்து இன்று பொருள் நுகர்வு வெறியாக மாறி உள்ளது. இன்றைய கல்வி முறையே பொருள் ஈட்டுவதற்கான வழிமுறையாக மாறியுள்ளது.

ஆடம்பரமாக வாழவேண்டும் என்ற வேட்கை பள்ளி பருவத்திலேயே வந்து விடுகிறது. கவர்ச்சிகரமான விளம்பரங்கள், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் காட்டப்படுவது போன்ற ஆடம்பரமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

எனவே நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருக்கவும் நுகர்வோர் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் நுகர்வோரை பாதுகாக்கவும்தான் 1986 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டன.

இந்த சட்டங்களில் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்புக்கான உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்வு செய்யும் உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, முறையிடுவதற்கான உரிமை, குறைதீர்க்கும் உரிமை ஆகிய ஆறு உரிமைகளை வழங்கி உள்ளது. 2019ல் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் விளம்பரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இயற்றப்பட்டது. இன்றைய இளைய சமுதாயம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

தேவைக்கான நுகர்வு என்று இல்லாமல் மித மிஞ்சிய பொருள் நுகர்வு காரணமாக கார்பன் வெளியீடு அதிகரித்து புவி வெப்பமயமாகி அதனால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. எனவே எளிய வாழ்க்கை வாழ பழகிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கிரண் நன்றி கூறினார்.

The post பேரிடர்களுக்கு காரணம் மித மிஞ்சிய பொருள் நுகர்வு appeared first on Dinakaran.

Read Entire Article