சென்னை: ‘ஊழல் அமைச்சர் காந்தி உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது திமுக ஊழல் அமைச்சர்களில் காந்தியே முதல் நபராக சிறை செல்வார்’ என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் இலவச காட்டன் வேட்டி சேலை திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழல் செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர் கமிஷன் காந்தி கடந்த ஆண்டு வேட்டி நெசவு செய்யப் பயன்படுத்தப்படும் கிலோ ரூ.320 வரை விற்கப்படும் பருத்தி நூலைக் குறைவாகவும், அதில் பாதி விலையான ரூ160-க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலை அதிகமாகவும் வாங்கி வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றியதை, தமிழக பாஜக சார்பாக, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்து, மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர், வெறும் 22 சதவீதம் மட்டுமே காட்டன் என்பதைக் கண்டறிந்து, உற்பத்திச் செலவில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்திருப்பதை வெளிப்படுத்தினோம்.