
சென்னை,
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியான 'எல்2 எம்புரான்' படத்தில், முல்லைப் பெரியாறு அணை உள்பட பல சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதனால் அப்படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தநிலையில் அந்த காட்சிகள் நீக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று நடந்து வரும் தமிழக சட்ட பேரவையில் 'எல்2 எம்புரான்' பட சர்ச்சை காட்சி குறித்து பேசப்பட்டது. அதன்படி, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
'அந்தக் காட்சி சென்சாரில் கட் செய்யவில்லை. படம் வெளியே வந்த பிறகு இந்த செய்தி வெளியே வந்து. அதன் பிறகு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பின்பு தான் அந்தக் காட்சி நீக்கப்பட்டுள்ளது' என்றார்.
அவை முன்னவர் துரைமுருகன் பேசுகையில்,
'நான் அந்த படத்தை பார்க்கவில்லை, அந்த படத்தை பார்த்தவர்கள் கூறியதை கேட்டதும் பயமும் கோபமும் வருகிறது. தேவையற்ற செயல் அது. அந்த திரைப்படத்தால் வேறு மாநிலங்களில் கூட பிரச்சினை வரலாம்' என்றார்.
எம்எல்ஏ வேல்முருகன் பேசுகையில்,
'எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணை உடைந்தால் கேரளாவே அழியும் என காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்த படம் தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது' என்றார்.