கேரள கழிவுகள் தமிழக கடலில் கொட்டப்படுகிறதா? - தமிழக அரசு விளக்கம்

1 week ago 3

சென்னை,

கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி, சுத்தமல்லி, முக்கூடல் உள்பட சில இடங்களில் சில மாதங்களுக்கு முன்பு கொட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் மருத்துவ கழிவுகளை முழுமையாக அகற்றுமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அந்த கழிவுகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் பற்றிய பேச்சு அடங்குவதற்குள் கேரளாவில் இருந்து கடல் மார்க்கமாக படகில் வந்து தமிழகத்தில் கழிவுகளை திறந்து விடுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது தமிழகத்தில் நடந்த சம்பவம் அல்ல. கடலில் கழிவுகள் கலப்பது போன்று உருவாக்கப்பட்ட இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவின் (ஏ.ஐ.) மூலம் வடிவமைக்கப்பட்டது. இந்த வீடியோ போலவே செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்ட பல்வேறு வீடியோக்களையும் அந்த வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார்கள். எனவே வதந்தியை பரப்பாதீர்" என்று கூறப்பட்டுள்ளது.

Read Entire Article