
மும்பை,
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சயிப் அலிகான். இவர் மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சயிப் அலிகான் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினார்.
சயிப் அலிகான் உடலில 6 இடங்களில் கத்திக்குத்து விழுந்த நிலையில், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சயிப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதனையடுத்து, நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்திய வங்கதேசத்தை சேர்ந்த முகமது சரிபுல் இஸ்லாம்(வயது 30), என்ற நபரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் மும்பை போலீசார், மூன்று மாதத்துக்கு பின்னர் பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீதான கத்திக்குத்து சம்பவத்தில், மும்பை போலீசார் 1,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கத்தி துண்டுகள் உட்பட தடயவியல் ஆதாரங்களுடன் பாந்த்ரா கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில் குற்றவாளி இஸ்லாம், நடிகரை தாக்கியதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.