
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். பெருமாநல்லூரின் வடமேற்கு பகுதியில் வடக்கு நோக்கி இக்கோவில் அமைந்துள்ளது.
கோவிலின் முன் திறந்த வெளியில் 60 அடி நீளம் உடைய குண்டம் உள்ளது. பங்குனி மாதம் பண்ணாரி அம்மன் திருவிழா நடைபெறும் நாட்களை ஒட்டி இக்கோவிலில் குண்டம் திருவிழா மற்றும் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இதில், குண்டம் திருவிழா மிகவும் பிரபலம். பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் அக்னி குண்டத்தில் இறங்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். குண்டம் அமைந்திருப்பதால் இந்த அம்மனுக்குக் குண்டத்து காளியம்மன் எனப் பெயரும் ஏற்பட்டது.
கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா, கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை (8-ந்தேதி) செவ்வாய்க்கிழமை அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். நாளை மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. குண்டம் இறங்கவும், தேரோட்டத்தில் பங்கேற்கவும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
விழாவையொட்டி கூடுதல் எஸ்.பி.க்கள் 2 பேர் தலைமையில், 3 டி.எஸ்.பி.,க்கள், 11 இன்ஸ்பெக்டர்கள், 32 சப்-இன்ஸ்பெக்டர்கள், 158 போலீசார், 80 ஆயுதப்படை போலீசார், 200 ஊர் காவல் படையினர், 50 டிராபிக் வார்டன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கோவில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் மற்றும் 2 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டு உள்ளது.
பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகம் முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 60 இடங்களில் மொபைல் டாய்லெட், 9 இடங்களில் குடிநீர் வசதி, பக்தர்கள் குண்டம் இறங்குவதை பார்க்க 2 இடங்களில் எல்.இ.டி. திரை, குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு, குண்டம் இறங்கும் பக்தர்கள் குளிக்க 20 ஷவர் கொண்ட அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பெருமால்லூரில் நாளை இரவு 10 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தீமிதி விழா எனப்படும் குண்டம் இறங்கும் நிகழ்வானது மிகப்பழங்காலம் தொட்டே உலகின் பல பகுதிகளிலும் நடைபெற்று வந்துள்ளது. கால்நடைகளை தீ மிதிக்கச்செய்வதும் சில இடங்களில் நடைபெற்றுள்ளது. விரதம் இருந்து குளித்து ஈரத்துணியுடன் வேப்பிலையை கையில் ஏந்தி தீ மிதிப்பதே மரபாகும்.