பெருங்கார் எனும் பாரம்பரிய பொக்கிஷம்…

6 months ago 16

மகசூல் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பலரும் கலப்பின விதைகளை பயிரிடுகிறார்கள். ஆனால், அந்த காலத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் பாரம்பரிய விதையும் பாரம்பரிய முறையில் விவசாயமும்தான். தற்போது விவசாயிகள் பலர் பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 90 களின் காலகட்டத்தில் விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது. இந்த தருணத்தில் விவசாயிகள் பலரும் கெமிக்கலை பயன்படுத்தி விவசாயம் செய்ய தொடங்கினர். ஆனால் இயற்கை முறையில் தமிழ்நாட்டில் அமோக விளைச்சலைத் தரும் எத்தனையோ பாரம்பரிய நெல்ரகங்கள் நிறைய இருந்தன. அப்படிப்பட்ட பாரம்பரிய நெல்ரகங்களில் பெருங்கார் எனும் நெல் திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி வட்டாரத்தில் புகழ்பெற்றது. இந்த பகுதியில் இன்றைக்கும் விவசாயிகள் பலர் பெருங்காரை சாகுபடி செய்துவருகின்றனர்.குறுகியகால நெல்வகையைச் சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான குறுவைப் பட்டம் எனும் இப்பருவத்தில், 120 நாள் நெற் பயிரான பெருங்கார் நெற்பயிரை பயிரிடலாம். மேலும் ஜூன், மற்றும் ஜூலை மாதங்களில் தொடங்கக்கூடிய குறுவைப் பட்டத்தில் திருவண்ணாமலை, கரூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் பெருங்காரை பயிரிட்டு குறுவை சாகுபடி செய்யலாம்
.
நேரடி நெல் விதைப்பு மற்றும் ஒற்றை நாற்று முறை என இரண்டுக்குமே ஏற்ற நெல் ரகம் இது. பெருங்காரை பொருத்தவரையில் ஒரு ஏக்கருக்கு நேரடி விதைப்புக்கு முப்பத்தைந்து கிலோ விதை நெல்லும் ஒற்றை நாற்றுமுறையில் பயிரிட நாற்பது கிலோ விதை நெல்லும் தேவைப்படும். களிமண், வண்டல் மண், செம்மண் நிலங்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மண் ரகங்கள் கலப்பு மண் நிலங்களிலும் மணல் பாங்கான நிலங் களிலும்கூட வளரக்கூடியது. நிலம் காய்ந்த பிறகு நீர் பாய்ச்சினால் போதுமானது. களிமண் நிலத்தில் சிறிதளவு நீர்விட்டாலே அந்த நீரைக்கூட தேக்கிவைத்துக்கொண்டு வளரும் இயல்புடையது இந்த பெருங்கார். ஏக்கருக்கு இரண்டு கிலோ வரை விதை நெல் தேவைப்படும். எந்தவொரு பயிரை நடவு செய்வதற்கு முன்பும் நிலத்தை சரியான முறையில் தயார் செய்ய வேண்டும். அதைப்போல பெருங்காரு நடவுக்கு முன்பு வயலைத் தேர்வு செய்வது, சமன்படுத்துவது, நாற்றாங்கால் அமைப்பதையும் போன்றவற்றை ஒரே காலத்தில் செய்ய வேண்டும். நாற்றங்கால் அமைப்பதற்கு முன்பு விதைநேர்த்தி செய்ய வேண்டியது அவசியம். விதையை மாலையில் ஒரு மணி நேரம் காயவைக்க வேண்டும். ஒரு ஏக்கர் விதை நெல்லுக்கு இருபது செண்ட் நாற்றங்கால் அமைக்கலாம்.

நன்கு தண்ணீர் விட்டு இரண்டு உழவு ஓட்டி சமப்படுத்திய பிறகு விதைக்க வேண்டும். நாற்று வளர்ந்துவந்த பிறகு நடவு செய்யத் தொடங்கலாம். பிறகு, நடும் முன்பு மறு உழவு ஒருமுறை ஓட்டிவிட்டு நடவு செய்ய வேண்டும். நாற்றுகளை நடும்போது ஏக்கருக்கு 50 கிலோ கடலைப் புண்ணாக்கு மற்றும் 30 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து அடியுரம் இட வேண்டும். நடவு செய்த 15வது நாளில் இரண்டாவது மேலுரம் போட வேண்டும். பெருங்காரை பொருத்தவரையில் நாலரை அடி உயரத்துக்கு வரும். இந்தப் பயிர் தண்டு துளைப்பான், கதிர் நாவாய்ப் பூச்சிகளையும் இயற்கையாக எதிர்த்து வளரும் நோய் எதிப்பு சத்து நிறைந்தது.மழை காற்று என்று அனைத்தையும் தாங்கி வளரக்கூடிய பக்குவம் கொண்டது. பெருங்காரையை பொருத்தவரையில் 120 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். பெருங்காரு சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 1.4 டன் நெல் தானியமும், சுமார் 1.6 டன் வைக்கோலும், மகசூலாகக் கிடைக்கும். பெருங்காரின் வைக்கோலை கால்நடைகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் அவைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். பெருங்காரு அரிசியில் அதிக அளவு தாது உப்புகள், நார்ச்சத்து உள்ளது. பெருங்காரு அரிசியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக இருக்கும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் குறையும். இதை உட்கொண்டால் இரத்த சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்காமல், கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் உள்ள இரும்புச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி6 உடலுக்கு ஆற்றல் தருகிறது. உடல் சோர்வை குறைத்து, சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது.

 

The post பெருங்கார் எனும் பாரம்பரிய பொக்கிஷம்… appeared first on Dinakaran.

Read Entire Article