அருமனை : களியல் அருகே சாலையோரம் ஆக்கர் வியாபாரி வீசிய கழிவுகளை போலீசார் திருப்பி அவரது கடைக்கு அனுப்பி வைத்தனர்.குமரி மாவட்டத்தில் பொது இடங்களில் கழிவுகளை கொட்டி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மாவட்ட எல்லை பகுதிகளை உள்ளடக்கிய கடையால் பேரூராட்சியில் அடிக்கடி மர்ம நபர்கள் கழிவுகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் களியல் அருகே கட்டச்சல் பகுதியில் சாலையோரத்தில் மூடைகளில் கட்டப்பட்ட கழிவுகளை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடையால் பேரூராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுபார்த்து விட்டு செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பொது இடத்தில் கழிவுகளை வீசி சென்ற மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரி செயல் அலுவலர் கடையாலுமூடு போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசாரின் விசாரணையில் களியல் பகுதியில் உள்ள ஆக்கர் கடையில் இருந்து கழிவுகள் கொண்டு வந்து வீசப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடை உரிமையாளர் மாத்தூர் கோணம் பகுதியை சேர்ந்த நகுலன் என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து போலீசார், பொது இடத்தில் கழிவுகளை வீசிய ஆக்கர் கடை உரிமையாளரே மீண்டும் கழிவுகளை எடுத்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டர். மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் ஆக்கர் கடை உரிமையாளர் நகுலன் கழிவுகளை மினி டெம்போவில் ஏற்றி தனது கடைக்கு கொண்டு சென்றார்.
The post களியல் அருகே சாலையோரம் ஆக்கர் வியாபாரி வீசிய கழிவுகளை கடைக்கே திருப்பி அனுப்பிய போலீசார் appeared first on Dinakaran.