விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 2வது நாளாக அன்புமணி புறக்கணித்துள்ளார். தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதில், பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில மகளிரணி தலைவர் சுஜாதா மற்றும் பாமக மகளிர் சங்க கடலூர் மாவட்ட தலைவர் கௌரி, செயலாளர் வீரா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். இருந்தபோதும் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த நிலையில் இளைஞரணி கூட்டத்திலும் அன்புமணி பங்கேற்கவில்லை.
இது தொடர்பாக பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; பாமகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு விரைவில் சரியாகும். கட்சியில் சலசலப்பு வருவது இயல்புதான். பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. பாமக கட்சியில் மிக விரைவில் சுமூகமான தீர்வு வரும். ராமதாஸ், அன்புமணி இருவரும் சந்திப்பதற்கான தீவிர முயற்சிகள் நடைபெறுகின்றன. ராமதாஸ், அன்புமணி இருவரும் மிக விரைவில் சந்திப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம். ராமதாஸ், அன்புமணி இருவரிடமும் நேற்று இரவு முதல் பேசி வருகின்றோம். தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக இருவரும் சந்தித்து பேசி நல்ல கூட்டணி அமைப்பார்கள். உட்கட்சி பிரச்சனையை பொதுவெளியில் சொல்ல விரும்பவில்லை என அவர் கூறினார்.
The post ராமதாஸ் ஆலோசனை- 2வது நாளாக அன்புமணி புறக்கணிப்பு.. பாமகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு விரைவில் சரியாகும்: ஜி.கே.மணி பேட்டி!! appeared first on Dinakaran.