பெருங்களத்தூர் அருகே ரயிலில் சிக்கி காதல் ேஜாடி பலி: காதலியை காப்பாற்ற முயன்று காதலனும் உயிரிழந்த சோகம்

2 hours ago 2

தாம்பரம், பிப். 13: வேலை முடிந்து வீடு திரும்பும்போது, மின்சார ரயிலில் சிக்கிய காதலியை காப்பாற்ற முயன்ற காதலனும் ரயிலில் அடிபட்டு பலியானார். இது, பெருங்களத்தூர் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெருங்களத்தூர் – வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இரண்டு சடலங்கள் கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் வைரவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு ஆண் மற்றும் பெண் என இருவரின் சடலங்கள் கிடந்தன.

இதை தொடர்ந்து உடல்களை மீட்ட போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவர்கள் யார், காதலர்களா, ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது உயிரிழந்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தவர்கள் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், பஞ்ச நல்லூர் கிராமத்தை சேர்ந்த விக்ரம் (21), சிதம்பரம், காமாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆதிலட்சுமி (22) என்பதும், இருவரும் ஒரே கல்லூரியில் பிஇ படித்துக் கொண்டிருந்தபோது காதலித்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும், கடந்த ஆண்டு படிப்பை முடித்துவிட்டு 7 மாதத்திற்கு முன்னர் சென்னையில் வேலை செய்வதற்காக வந்து பெருங்களத்தூர் பகுதியில் தனித்தனியாக அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது வீட்டில் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், நேற்று முன்தினம் இரவு இருவரும் வேலைக்கு சென்று விட்டு அரசு பேருந்து மூலம் பெருங்களத்தூர் அடுத்த இரணியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கி உள்ளனர்.

பின்னர் அங்கிருந்து தாங்கள் தங்கி இருக்கும் அறைகளுக்கு செல்வதற்காக வண்டலூர் ரயில்வே மேம்பாலம் அருகே பேசிக்கொண்டே கவனக்குறைவாக ரயில்வே தண்டவாளத்தை இருவரும் கடக்க முயற்சித்த போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் இருவரும் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் ஜோடி ரயில் வருவதை கவனிக்காமல் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது அதில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்றும், தற்கொலை இல்லை எனவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post பெருங்களத்தூர் அருகே ரயிலில் சிக்கி காதல் ேஜாடி பலி: காதலியை காப்பாற்ற முயன்று காதலனும் உயிரிழந்த சோகம் appeared first on Dinakaran.

Read Entire Article