‘‘பணிநேரத்தில் அவ்வப்போது மாயமாகி போகும் சேல்ஸ்மேனால் அன்றாட கூலிகள் கொந்தளித்து விட்டார்களாமே தெரியுமா..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடல் ஊர் மாவட்டத்தில் புதிய மாவட்டமாக உருவாகும் தகுதி இருப்பதாக கூறப்படும் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் நியாய விலைக்கடை இருக்கு.. 300 கார்டுகள் வரை கொண்ட இப்பகுதியில் விற்பனையாளரான தேவி பெயர் கொண்டவர், மற்றொரு கடையையும் கூடுதலாக கவனிக்கிறாராம்.. அங்குள்ள சேல்ஸ்மேன் பணிநேரத்தில் இல்லாமல் அவ்வப்போது மாயமாகி விடுகிறாராம்.. சமீபத்தில் கடை முன்பு பொருட்கள் வாங்க காலையிலே மக்கள் காத்திருந்த நிலையில் சேல்ஸ்மேன் இல்லாமல், அவர் அனுப்பி வைத்த நபர், திடீரென வந்து பொருட்களை சிலருக்கு மட்டும் வழங்கினாராம்.. பின்னர் சிறிதுநேரத்தில் மெஷின் ரிப்பேர் எனக் கூறிவிட்டு 10 மணி வரையிலும் பொருட்களை வழங்கவில்லையாம்..
இதனால் அன்றாட வேலைக்கு செல்லும் கூலிகள் கொந்தளித்து விட்டார்களாம்.. ஒவ்வொரு முறையும் சரியான முறையில் பொருட்கள் வழங்குவதில்லை, சேல்ஸ்மேன் சரிவர வருவதில்லை, தனி விற்பனையாளர் கட்டாயம் தேவை என்ற தங்களது கோரிக்கையை உயர் மட்டத்துக்கு புகார் கடிதமாக அனுப்ப தயாராகி விட்டார்களாம்.. இதனால் நியாய விலைக்கடை வட்டாரம் கலகலத்து போயிருக்கிறது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பல கோடி லஞ்சம் பேசி வர்றாராமே ஒரு பதிவு அதிகாரி..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கார்கள் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஒரு தனியார் நிறுவனம் சென்னையில் ஏஐ தொழில் நுட்ப நிறுவனம் தொடங்குவதற்காக கொரட்டூர், அம்பத்தூர் பகுதிகளில் இடம் பார்த்து வந்தார்களாம். அதில் ஒரு இடம் பிடித்துள்ளதாம். அந்த இடத்துக்கு பத்திரப்பதிவு செய்தால், பல கோடி ரூபாய் அரசுக்கு வரியாக கட்ட வேண்டிய நிலை உள்ளதாம்.
அதாவது சுமார் ஆயிரத்து 500 கோடிக்கு மேல் உள்ள சொத்தை ரூ.850 கோடிக்கு பதிவு செய்ய உள்ளார்களாம். அம்பத்தூர் மற்றும் வில்லிவாக்கம் ( கொரட்டூர்) என இரண்டு அலுவலக சொத்தை வழிகாட்டி மதிப்பை போலியாக மறைத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வில்லங்க சொத்தை பதிவு செய்ய வில்லிவாக்கம் பதிவு அதிகாரி ஒருவர் பல கோடி லஞ்சம் பேசி வருகிறாராம். இவர் மீது பல லஞ்ச புகார் வந்த பின்னர் பதிவுத்துறை செயலாளர் மாற்ற சொன்ன பின்னரும் மாற்றப்படாமல் பணிபுரிந்து வருகிறாராம். மேலும் இவர் ஆவடியில் பணியில் இருந்தபோது பதியக்கூடாத ஆவணங்களை பதிந்து கொடுத்து பல கோடி லஞ்சம் வாங்கி குவித்தாராம். அவர் எங்கு சென்றாலும், இதுபோன்று வில்லங்கத்தை செய்து கொள்ளையடித்தாலும் தப்பித்து விடுவாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சி தலைவருக்கு எதிராக சாட்டையை எடுத்திருக்கிறதாமே டெல்லி..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாட்டை ஆளும் தலைவரே எங்களது இலைக்கட்சி தலைவரை அருகில் நிற்க வைத்து அழகு பார்க்கிறாரே என ரத்தத்தின் ரத்தங்கள் ஒரு காலத்தில் கைதட்டி மகிழ்ந்தாங்களாம்.. ஆனால் அவரையே தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டவர் எங்களது தலைவர். இவ்வளவு தைரியம் எங்கள் தலைவரை விட்டால் வேறு யாருக்கும் கிடையாதுன்னு நெஞ்சை நிமித்தினாங்களாம்.. அதை நிரூபிக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் மலராத கட்சியுடன் சேரவே மாட்டேன் என மறுத்தும் விட்டாராம் இலைக்கட்சி தலைவர். ஆனால் தற்போது எட்டு பக்கமும் இருந்து அவருக்கு நெருக்கடி வந்துக்கிட்டிருக்காம்.. இந்த உலகத்துலேயே எங்களை கூட்டணியில் சேருங்கன்னு கெஞ்சி நூல்விடும் கட்சியை கேள்விப்பட்டிருக்கோம்.. ஆனால் எங்களை இலைக்கட்சியோடு சேர்த்துக்கோங்கன்னு நெருக்கடி கொடுக்கும் கட்சி ஒன்று இருக்காம்.. அது தான் மலராத கட்சியாம்.. அக்கட்சியில் இருந்து கொடுக்கும் நெருக்கடியை இலைக்கட்சி தலைவரால் வரவர தாங்க முடியலையாம்.. இதனால் அவரது பிடியும் தளர்ந்துகிட்டே வருதாம்..
அவரது உறவினர் வீட்டில் நடந்த திடீர் சோதனைக்கு பிறகு இலைக்கட்சி தலைவர் கொஞ்சம் ஆடித்தான் போனாராம்.. டெல்லி தேர்தலில் தாமரை வெற்றி குறித்து கூறும்போது, மக்கள் அவர்களை விரும்புகிறார்கள் என்று சொன்னாராம்.. வழக்கமாக வேறு கட்சியை பற்றி பதில் சொல்ல மாட்டேன் என கூறும் இலைக்கட்சி தலைவர், மக்கள் விரும்புகிறார்கள் என கூறியதை வைத்தே வலையில் வசமாக சிக்கிகிட்டார் என்பதை இலைக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் உணர்ந்துட்டாங்களாம்.. இதனால இலைக்கட்சி தலைவர், எந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என சொன்னாரோ, அந்த கட்சியுடன் நெருங்கி வருகிறாராம்.. ஆனால், அதிகாரத்தை கையில் எடுத்துள்ள டெல்லி, இப்போதைய இலைக்கட்சி தலைவர் இல்லாத இலைக்கட்சியை கொண்டு வரவேண்டும் என்பதில் குறியா இருக்காங்களாம்.. இதற்கான வேலையில் இறங்கியிருக்கும் நிலையில், இனி மூத்த நிர்வாகிகள் ஆங்காங்கே கொடி பிடிப்பாங்களாம்.. இதனால தேனிக்காரர் ரொம்பவே மகிழ்ச்சியா இருக்காராம்..
கூட்டணியில் சேர்க்க வேண்டும் என இலைக்கட்சி தலைவருடன் சண்டையே போட்டிருக்கேன். கரை வேட்டிக்கூட கட்டமுடியாத நிலையில் இருக்கும் தன்னைத்தான் மேலே கொண்டு வருவாங்கன்னு நினைக்கிறாராம்.. ஆனால் அவர் நல்லவர் தான், வல்லவர் இல்லை என்ற கருத்தை கொண்டுள்ள டெல்லி, சின்னமம்மியை தலைமைக்கு கொண்டு வர திட்டம் வச்சிருக்குதாம்.. மம்மியோடு இருந்த மூத்த தலைவர்கள் எல்லோரையும் ஆட்டி படைச்சது சின்ன மம்மிதானாம்.. எனவே அவருக்கு இன்னமுமே விசுவாசமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருது.. இந்த தகவலை அறிஞ்ச சின்னமம்மி அடிப்பொடிகள் ஹேப்பியாக இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
The post இலைக்கட்சி தலைவருக்கு எதிராக சாட்டையை எடுத்திருக்கும் தாமரை தலைமையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.